This Article is From Jun 29, 2020

கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கா..?

தமிழகத்தில் நேற்று 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கா..?

தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 1,079 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

ஹைலைட்ஸ்

  • சென்னை உள்ளிட்ட 4 வட மாவட்டங்களில் நாளை வரை ஊரடங்கு உள்ளது
  • மதுரை, தேனி மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது
  • தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை செய்கிறார். 

இன்று காலை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவை சந்திக்கிறார் முதல்வர். கடந்த 19 ஆம் தேதி, கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் சென்னை உள்ளிட்ட 4 வட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அதேபோல மாநிலத்தின் ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்திற்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் நாளையோடு முடிவுக்கு வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. இது குறித்துதான் முதல்வர், மருத்துவக் குழுவுடன் ஆலோசனை செய்கிறார். 

தமிழகத்தில் நேற்று 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,992 பேர். ஒட்டுமொத்த அளவில் 82,275 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,443 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 45,537 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 35,656 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 54 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,079 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 
 

.