This Article is From May 09, 2020

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஏய்ம்ஸ் தலைவரை குஜராத்துக்கு அனுப்ப ஆர்டர் போட்ட அமித்ஷா!

நாட்டில் உள்ள கொரோனா பாதிப்புகளில், 60 சதவீதம் 8 பிராதான நகரங்களில்தான் உள்ளது என்பது தெரியவந்துள்ளது

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஏய்ம்ஸ் தலைவரை குஜராத்துக்கு அனுப்ப ஆர்டர் போட்ட அமித்ஷா!

மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத்தில் மட்டும் நாட்டின் 42 சதவீத கொரோனா பாதிப்புகள் உள்ளன. 

ஹைலைட்ஸ்

  • நாட்டிலேயே மகாராஷ்டிராதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • அதைத் தொடர்ந்து குஜராத்தில்தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது
  • குஜராத்தில் இதுவரை 7,402 பேருக்கு கொரோனா பாதிப்பு
Ahmedabad:

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை தலைவரை அங்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இது குறித்த தகவலை உள்துறை அமைச்சக வட்டாரம் நமக்குத் தெரிவித்துள்ளது. 

அமித்ஷாவின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று மாலை, இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் குஜராத்திற்கு சென்றுள்ளார் ஏய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர், மருத்துவர் ரந்தீப் குலேரியா. அவருடன் இன்னொரு எய்ம்ஸ் மருத்துவரான மணிஷ் சுரேஜாவும் சென்றுள்ளார். 

குஜராத்தில் இதுவரை 7,402 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 449 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 390 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனை மூலம் கண்டறியப்பட்டது. இதுவரை அம்மாநிலத்தில் 1,872 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர். 

அகமதாபாத்திற்கு சென்ற எய்ம்ஸ் மருத்துவர்கள், எஸ்விபி மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அப்போது எய்ம்ஸ் மருத்துவர்கள், கொரோனா சிகிச்சை குறித்து சில அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எய்ம்ஸ் இயக்குநர், குஜராத்தின் முதன்மைச் செயலாளரை சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார். அவர் குஜராத்தின் முதலவர் விஜய் ருபானியையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 59,662 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3,320 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 95 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரை கொரோனாவால் 1,981 பேர் உயிரிழந்துள்ளனர். 17,847 பேர் குணமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குணமடைபவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, 26.59 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 29.91 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டில் உள்ள கொரோனா பாதிப்புகளில், 60 சதவீதம் 8 பிராதான நகரங்களில்தான் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத்தில் மட்டும் நாட்டின் 42 சதவீத கொரோனா பாதிப்புகள் உள்ளன. 

.