This Article is From Jun 12, 2020

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்தவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு!

சென்னையில் 27 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது தமிழக பாதிப்பில் 70 சதவீதம் ஆகும். குடிசைப் பகுதியில் மட்டும் 27 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களை பாதிப்பிலிருந்து மீட்பது சவாலான விஷயம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்தவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு!

சென்னையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 ஆயிரம்பேர் கொரோனா பரிசோதனை செய்துகொள்கின்றனர்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவர 2-3 நாட்கள் ஆகும்
  • இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டவரால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம்
  • அடுத்த 2 வாரத்தில் 3 லட்சம்பேர் சென்னையில் தனிமைப்படுத்தப்படுவார்கள்
Chennai:

கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு சென்றவர்கள் அல்லது ஆய்வகத்திற்கு மாதிரிகளை அனுப்பியவர்களும், அவர்களது குடும்பத்தினரும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாவிட்டாலும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.  இங்கு மட்டும் 27 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

இந்த நிலையில்தான் பரிசோதனைக்கு செல்பவர்களும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், சிலர் தங்களுக்கு அறிகுறிகள் இருந்தாலும்கூட 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், பரிசோதனையை அவர்கள் தவிர்க்க கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. 

புதிய உத்தரவுப்படி சென்னையில் செயல்பட்டுவரும் 30 ஆய்வகங்களுக்கு சென்றவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இங்கு வந்தவர்களின் முகவரி பெறப்பட்டுள்ளன. கடந்த 2 வாரத்தில் ஆய்வகங்களுக்கு வந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் பேர் கொரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனர். புதிய உத்தரவுப்படி சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம்பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அடுத்த 2 வாரத்திற்குள்ளாக இந்த எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்து விடும். 

இவ்வாறு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வோருக்கு உதவியாக 8 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

சென்னையில் 27 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது தமிழக பாதிப்பில் 70 சதவீதம் ஆகும். குடிசைப் பகுதியில் மட்டும் 27 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களை பாதிப்பிலிருந்து மீட்பது சவாலான விஷயம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இங்கு வசிப்பவர்கள் பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 100  அபராதம் விதித்தபோதிலும், குடிசைப் பகுதி மக்களில் 15 சதவீதம்பேர் விதிகளை மீறுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். 

நாட்டிலேயே அதிக பாதிப்பு மகாராஷ்டிராவில்தான் ஏற்பட்டிருக்கிறது.  இங்கு 97 ஆயிரத்து 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. 

இதற்கிடையே முக்கிய நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறையின் முதன்மை செயலராக இருந்த பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டு ஜெ. ராதாகிருஷ்ணன் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

பரிசோதனை செய்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்  கொள்ள வேண்டும் என்ற உத்தரவு குறித்து ராதா கிருஷ்ணன் கூறுகையில், 'கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு 2 முதல் 3 நாட்கள் வரை ஆகிவிடும். இந்த கால கட்டத்தில் பரிசோதனைக்கு வந்தவருக்கு கொரோனா  ஏற்கனவே இருந்தால், அவர் மூலமாக சிலருக்கு பரவி விடும் வாய்ப்பு உள்ளது. எனவேதான் பரிசோதனைக்கு வந்தாலே அவர்கள் தங்களை குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

பரிசோதனை முடிவு நெகடிவாக வந்து, கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தொடர்ந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பாசிட்டிவாக இருந்தால் அவர்களது  நிலைமையை பொருத்து மருத்துவமனை, கொரோனா மையங்களில் சேர்க்கப்படுவார்கள்' என்று தெரிவித்தார். 

.