This Article is From Jan 21, 2020

’மன்னிப்பு கேட்க முடியாது’; ரஜினியின் நிலைப்பாட்டிற்கு குருமூர்த்தி, எச்.ராஜா வரவேற்பு!

ரஜினியின் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது. யாருடைய நம்பிக்கையையும்  கொச்சைப்படுத்தி இழிவு படுத்துவது தவறு என்பதைத் தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் என குருமூர்த்தி கூறியுள்ளார்.

’மன்னிப்பு கேட்க முடியாது’; ரஜினியின் நிலைப்பாட்டிற்கு குருமூர்த்தி, எச்.ராஜா வரவேற்பு!

ரஜினியின் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது - குருமூர்த்தி

பெரியார் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதற்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

கடந்த ஜன.14-ஆம் தேதி துக்ளக் இதழின் 50-ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் 1971-இல் சேலத்தில் நடந்த நிகழ்வு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் விளக்கமளித்தார். ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். நான் கற்பனையாக எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல; மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மன்னிப்பு கேட்க முடியாது என்ற ரஜினியின் நிலைப்பாட்டிற்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது, ரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்; ஏனென்றால், அன்று அவர் பேசியது பொய் அல்ல. அன்று ஏதோ நாங்கள் பெரிய வீரச்செயலை செய்துவிட்டதாக தம்பட்டம் அடித்த திராவிட கழகத்தினர் இன்று எதற்காக மறுக்கிறார்கள். அதனால், தான் நீங்கள் செய்ததை மறுக்காதீர்கள், மறந்துவிடுங்கள் என்கிறார் ரஜினி. 

இனி இந்து விரோதமாக செயல்படாதீர்கள் என்பதை அவர்களுக்கும் புரியும் வகையில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். பெரியாரும் அவரது தொண்டர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் இந்து விரோதிகள். விநாயகர் சிலையை சாலையில் வீசியவர்கள், ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு, செருப்பால் அடித்தார்கள் இவர்கள் இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தார்கள். 

தற்போது இந்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இப்போதும் அதே போன்று பேசினால் திமுக, தி.க-வாக மாறிவிடும் என்ற பயத்தினால் அவர்கள் மறுக்கிறார்கள். ஆகவே தான் மறுக்காதீர்கள், மறந்துவிடுங்கள் இனி இதுபோன்று செய்யாதீர்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவரின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன், அவரை நான் பாராட்டுகிறேன். 

இந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் எச்.ராஜாவுக்கு எதிராக தி.க, திருமாவளவன், தமிழ் தேசியவாதிகள் எனது படத்தை எரிக்கிறேன், ஆர்ப்பாட்டம் நடத்துகிறேன் என்று செய்தார்கள் எங்காவது 10 பேருக்கு மேல் இருந்தார்களா? திமுக காரர்களே இதனை ஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரும் இறை நம்பிக்கை உள்ளவர்கள். 

மேலும், நடந்த சம்பவத்தை பேசியுள்ளதால் சட்டரீதியாக ரஜினிகாந்திற்கு எதிராக இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோல், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, ரஜினியின் இன்டர்வியூ நடந்துகொண்டிருக்கிறது. பாருங்கள். ரஜினியின் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது. யாருடைய நம்பிக்கையையும்  கொச்சைப்படுத்தி இழிவு படுத்துவது தவறு என்பதைத் தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு தமிழகம் நன்றி செலுத்தவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

.