This Article is From Aug 07, 2020

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது; சுங்கத்துறை

பெய்ரூட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட பெரிய அளவிலான அம்மோனியம் நைட்ரேட் சென்னை அருகே ஒரு துறைமுகத்தில் கிடந்துள்ளது.

Chennai:

சமீபத்தில் மத்திய கிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்தது. இந்த வெடி விபத்தில், 135 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

இந்த வெடிபொருள் சிவகாசிக்கான வெடி பொருள் என்றும், இது 2015 இல் சென்னை துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டது என்றும், அப்போதிலிருந்து இது அங்கேயே கிடந்துள்ளது என்றும் துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 36 கொள்கலன்கள், ஒவ்வொன்றும் சுமார் 20 டன் அம்மோனியம் நைட்ரேட்டை நீண்ட காலத்திற்கு முன்பே சேமித்து வைக்கப்பட்டுவிட்டது என்றும், இப்போது அவை சுங்கத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“சத்வா கொள்கலன் டிப்போவில் எங்களிடம் 697 டன் அம்மோனியம் நைட்ரேட் உள்ளது. இது ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டது. அவற்றை அப்புறப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம், விரைவில் அனைத்து விவரங்களையும் தருவோம்.” என சுங்கத் துறை மூத்த அதிகாரி ஒருவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதையும் அந்த அதிகாரி மறுத்தார். “இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் சென்றது. கடந்த நவம்பரில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. தற்போது இது ஏலத்தில் உள்ளது.” என அவர் கூறியுள்ளார்.

பெய்ரூட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.