This Article is From Dec 11, 2018

5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 10 முக்கியத் தகவல்கள்!

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் வெற்றி பெறுவது இரு பெரும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 10 முக்கியத் தகவல்கள்!

2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன

New Delhi:

2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் வெற்றி பெறுவது இரு பெரும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், வெற்றி பெறும் கட்சிதான், நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களைப் பெறும் என்று முந்தைய தரவுகள் உணர்த்துகின்றன. நீண்ட நாள் எதிரிகளாக இருந்த சந்திரபாபு நாயுடுவும் - காங்கிரஸும் தெலங்கானாவில் கூட்டு வைத்துத் தேர்தலை சந்தித்துள்ளனர். அவர்கள் அம்மாநிலத்தில் பெறும் வெற்றியானது, எதிர்கட்சிகள் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைவதை துரிதமாக்கும் எனப்படுகிறது. வடகிழக்கில், பாஜக ஆட்சி செய்யாத ஒரே மாநிலம் மிசோரம். எனவே, அம்மாநிலத்திலும் தனது கொடியை நாட்ட பாஜக அனைத்து வித முயற்சியையும் எடுத்துள்ளது. 

இது குறித்த 10 முக்கியத் தகவல்கள்:

1. பா.ஜ.க வின் தொடர் வெற்றி மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மூலம் முடிவுக்கு வரும் என எதிர்பார்`க்கப்படுகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மிசோரமில் உள்ள மிசோ தேசிய முன்னணி, அங்கு காங்கிரஸை வீழ்த்தும் என கணிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக பதவிக்கு வருவார் என்று கருத்துகணிப்புகள் தெரிவித்துள்ளன.

2. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில், சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராமன் சிங் ஆகியோர் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கங்கள் நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 116 இடங்களை பிடிக்க காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க- இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. மத்திய பிரதேச தேர்தலில் "ஆக்கம் அல்லது அழிவு" என்ற கொள்கையைக் கொண்டு செயல்பட்ட காங்கிரஸ் கட்சி, 140 இடங்களை வெல்வோம் என தெரிவிக்கிறது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் அங்கு யார் தலைமையில் ஆட்சி இருக்கும் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸின் மூன்று முக்கிய தலைவர்கள், கமல்நாத், திக்விஜய சிங் மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் முரணாக இருந்தாலும், தேர்தல் பணிகளில் முன்னணியில் செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. மாவோயிஸ்ட் ஆதிக்கம் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் மாயாவதி - அஜித் ஜோகி கூட்டணியுடன் பலப்ரிட்சை நடத்தியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, அம்மாநிலத்தின் 90 தொகுதிகளில் 66 வேட்பாளர்ளை நிறுத்தி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

5. தொங்கு சட்டப்பேரவை அமையும் பட்சத்தில், மாயாவதி - அஜித் ஜோகி கூட்டணிதான், யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும். அதே நேரத்தில் முதல்வர், ரமண் சிங், ‘அரசுக்கு சாதகமாக மக்கள் வாக்களிப்பார்கள். அதன் மூலம் தொடர்ந்து 4வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

6. ராஜஸ்தானைப் பொறுத்தவரை காங்கிரஸ் தரப்பு, ‘வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, அவர் இந்த முறை நிச்சயம் வீழ்த்தப்படுவார்' என்று கூறியுள்ளது. ஆனால், இந்த முறையும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக ராஜே, தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். ராஜஸ்தானில் கடந்த பல தேர்தல்களாக காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளன.

7. ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில், அந்த கட்சியின் இரண்டு முக்கியப் புள்ளிகளான சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலோட் ஆகிய இருவர் மத்தியில் யார் முதல்வராக வர வேண்டும் என்பதை அக்கட்சித் தீர்மானிக்க வேண்டும். இதுவரை காங்கிரஸ், முதல்வர் வேட்பாளர் கேள்வி குறித்து மவுனம் காத்து வருகிறது. ‘பெரும்பான்மை பெற்ற பிறகு யார் முதல்வர் ஆவார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்' என்று கூறியுள்ளது காங்கிரஸ் தரப்பு. 

8. தெலங்கானாவில், வாக்குப்பதிவுக்குப் பின்னர் வெளியான கருத்துக் கணிப்புகள் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு ஆதரவாக இருந்தது. இதனால் மாநில பாஜக தலைவர் லக்ஷ்மன், ராவின் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். ஆனால், இந்த ஆதரவை ராவ், நிராகரித்துள்ளார். 

9. சந்திரசேகர் ராவின் கட்சிதான் வெற்றி பெறும் என்று அதிக கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வந்தாலும், காங்ரிஸ் - தெ.தே கட்சியினர் ஆளுநரை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பில், ‘தொங்கு சட்டமன்றம் அமைந்தால், பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுக்குத் தான் முதல் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்' என்று அவர்கள் ஆளுநர் இடத்தில் தெரிவித்துள்ளனர். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஒவைசி, ராவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

10. மிசோரமில், மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 18-ஐ மிசோ தேசிய முன்னணி வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், பதவி இழக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. பாஜக மட்டும் மிசோரமில் வெற்றி பெற்றால், வட கிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்யும் பெருமையை அக்கட்சிப் பெறும்.

.