This Article is From Aug 06, 2019

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: காங்கிரஸ் முகாமில் குழப்பம்!- ராகுலின் நிலைப்பாடு என்ன?

Article 370 Jammu And Kashmir: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: காங்கிரஸ் முகாமில் குழப்பம்!- ராகுலின் நிலைப்பாடு என்ன?

காஷ்மீர் விவகாரத்திலும் ராகுல் காந்தி, தனது கருத்தைப் பொதுத் தளத்தில் சொல்லவில்லை.

New Delhi:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதற்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸில் எதிர்ப்பும் ஆதரவுக் குரலும் எழுந்துள்ளன. இது குறித்து அக்கட்சியின் பல முன்னணி நிர்வாகிகள், வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

காங்கிரஸின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, “காஷ்மீர் விவகாரம் குறித்து எங்களுக்கு முன்னரே தெரியவில்லை என்றெல்லாம் சொல்வதற்கில்லை. கடந்த ஒரு வாரமாக நாங்கள் அது குறித்துதான் விவாதித்து வருகிறோம். காஷ்மீர் விவகாரத்தில் எதிராக வாக்களித்த கட்சிகளில் நாங்களும் ஒருவர். எங்களுக்குள் சிலருக்கு மாற்றுக் கருத்து இருப்பது உண்மைதான்” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

நேற்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதற்கான மசோதா மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களில் சிலர் வெளிநடப்பு செய்தனர். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி, நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம், ஜெகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்டவை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். காஷ்மீர் விவகாரத்திலும் ராகுல் காந்தி, தனது கருத்தைப் பொதுத் தளத்தில் சொல்லவில்லை. காங்கிரஸுக்குள்ளேயே காஷ்மீர் பிரச்னையில் இரு வேறு கருத்து இருப்பது குறித்து விவாதிக்க கட்சியின் காரிய கமிட்டி கூட்டப்படுமா என்று கேட்டதற்கு, “நான் கட்சியின் தலைவர் இல்லை. எனவே, அது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது” என்று NDTV-யிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

நேற்று ராஜ்யசபாவில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமா அல்லது எதிர்க்க வேண்டுமா என்று விவாதிக்கப்பட்டதாகவும், இறுதியில் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன. குறிப்பாக 370 சட்டப் பிரிவை ரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கு பலரும் காங்கிரஸுக்குள் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். 

ஆனால் காங்கிரஸின் மூத்த நிர்வாகி ஜனார்தன் திரிவேதி, “எனது ஆசான் ராம் மனோகர் லோகியா, முதலில் இருந்தே 370-வது சட்டப் பிரிவுக்கு எதிராகத்தான் இருந்தார். என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு தேசிய தியாகமாகும். சுதந்திரத்தின் போது செய்யப்பட்ட தவறு இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது” என்று கருத்து கூறியுள்ளார். 

முன்னதாக ராஜ்யசபா காங்கிரஸ் கொறடாவான புபனேஷ்வர் காலிதா, கட்சியிலிருந்து வெளியேறினார். அவர், “காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸின் நிலைப்பாடு தற்கொலைக்கு சமமானது. நாட்டின் எண்ண ஓட்டத்துக்கு எதிரானது. எனவே அதில் ஒரு பங்காக நான் இருக்க விரும்பவில்லை” என்று கூறினார். 

.