This Article is From May 14, 2020

இந்திய ராணுவத்தில் சாதாரண குடிமக்களுக்கு 3 ஆண்டு பணி செய்ய வாய்ப்பு: தயாராகும் புதிய திட்டம்!!

3-year Army service: சுமார் 13 லட்சம் பேர் உள்ள இந்திய ராணுவத்தின் சேவைகளை சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்...

இந்திய ராணுவத்தில் சாதாரண குடிமக்களுக்கு 3 ஆண்டு பணி செய்ய வாய்ப்பு: தயாராகும் புதிய திட்டம்!!

இந்த புதிய திட்டம் குறித்து ராணுவத்தின் மேல் மட்ட அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • இப்புதிய திட்டத்தால் ராணுவத்திற்கு நிதி சார்ந்த பயன்கள் இருக்கும்
  • வயது, உடற்தகுதி இந்த புதிய திட்டத்திற்கு முக்கியமானதாக இருக்கும்
  • இளைஞர்களைக் கவரவே இப்புதியத் திட்டம் பற்றி பேசப்பட்டு வருகிறது
New Delhi:

இதுவரை இல்லாத வகையில், இந்திய ராணுவத்தில் சாதாரண குடிமக்கள் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பணி செய்ய வாய்ப்பளிக்கும் புதிய திட்டம் தயாராகி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. குடிமக்கள், ராணுவ அதிகாரிகளாகவும், தளவாடத் துறைகளில் பணி செய்யவும் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. 

அதேபோல துணை ராணுவப் படை மற்றும் மத்திய ஆயுதப் படைகளில் உள்ள நபர்களை, 7 ஆண்டு வரை ராணுவத்தில் பணிபுரிய வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ராணுவ மேல்மட்டத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 ஆண்டுகள் ராணுவ சேவை முடிந்த பின்னர், சம்பந்தப்பட்ட நபர்கள் மீண்டும் தங்களின் சொந்த படைப் பிரிவுக்கே அனுப்பப்படுவார்கள்.

சுமார் 13 லட்சம் பேர் உள்ள இந்திய ராணுவத்தின் சேவைகளை சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய திட்டம் குறித்து ராணுவத்தின் மேல் மட்ட அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

“இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தால், தன்னார்வத்துடன் வருபவர்கள் எந்தவித பாரபட்சமுமின்றி தேர்வு செய்யப்படுவார்கள். தற்போதைக்கு 100 அதிகாரிகளும் 1,000 சாதாரண பணியாளர்களையும் பணிக்கு அமர்த்தலாம் என்று பேசப்பட்டு வருகிறது,” என்று இவ்விவகாரம் குறித்து விளக்குகிறார் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த். 

இந்த புதிய திட்டம், ‘டூர் ஆஃப் டூட்டி' (ToD) அல்லது ‘மூன்று ஆண்டு குறுகிய சேவை' என்று அழைக்கப்படும். வயது மற்றும் உடற்தகுதி உள்ளிட்டவை இந்தத் திட்டத்தில் பணிக்கு சேர முக்கிய தகுதிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘நாட்டில் தேசப் பற்று மற்றும் தேசியவாதம் குறித்த அலை உருவாகியுள்ளது. இந்த சூழலில் இளைஞர்களைக் கவர வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. சில இளைஞர்கள் ராணுவத்திலேயே நிரந்தரமாக பணி செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால், ஒரு குறுகிய காலத்திற்கு ராணுவத்தில் அனுபவம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். அவர்களை நோக்கியே இத்திட்டம் செயலாற்றப்படும்,' என்று ராணுவ வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறுகிறார். 

இந்தத் திட்டம் பற்றி ராணுவத்தின் மேல் மட்ட அதிகாரிகள் நன்கு ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்றும், இதன் மூலம் இந்திய ராணுவத்திற்கு நிதி சார்ந்த பயன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

தற்போது ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (SSC) மூலம் இந்திய ராணுவம், இளைஞர்களை தேர்வு செய்து வருகிறது. இந்த கமிஷன் மூலம் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தால், 10 ஆண்டுகள் சேவையாற்ற அனுமதிக்கப்படுவார்கள். அந்த சேவை 14 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. 

ToD மூலம் ராணுவத்தில் சேரும் நபர்கள், பாதுகாப்புப் பணியின் முன்னணியில் கூட பணியமர்த்தப்படுவார்களாம். 

SSC மூலம் பணிக்கு சேரும் ஒரு அதிகாரிக்கு, 10 முதல் 14 ஆண்டுகளுக்கு, பயிற்சி மற்றும் பிற செலவுகள் சுமார் 5.12 கோடி ரூபாயிலிருந்து 6.83 கோடி ரூபாய் வரை ஆகுமாம். அதே நேரத்தில் ToD மூலம் இதைச் செய்தால் 80 லட்ச ரூபாய் முதல் 85 லட்ச ரூபாய் வரை மட்டுமே செலவாகுமாம். 

அதேபோல சிப்பாய் அளவில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு 17 ஆண்டு காலம் ஆகும் செலவுகளையும் ToD மூலம் ஆகும் 17 ஆண்டு செலவுகளும் ஒப்பிடப்பட்டுள்ளன. 

வெறும் 1,000 ராணுவ வீரர்களுக்கே, இந்தத் திட்டத்தின் கீழ் 11,000 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று கணக்குப் போடப்பட்டுள்ளது. 

இந்த நிதியை வைத்து ராணுவத்திற்குத் தேவையான மற்ற விஷயங்கள் செய்ய பயன்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

ToD மூலம் ஒரு இளைஞருக்கு சேவை முடிந்த பின்னர் அவரின் தன்னம்பிக்கை, குழுவுடன் சேர்ந்து பணியாற்றுதல், பொறுப்பு, மன உளைச்சலை கையாளுதல், சமூகத் திறன், யோசிக்கும் திறன் உள்ளிட்டவை அதிகரிக்கும் என்று ஒரு ராணுத அதிகாரி கூறுகிறார். 

“22, 23 வயதில் ஒரு ஆணோ பெண்ணோ, ஒரு நிறுவனத்தில் பணி கேட்பதற்கும், ராணுவத்தில் பணியை முடித்த பின்னர் 26, 27 வயதில் பணி கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நிறுவனங்கள், ராணுவ அனுபவம் உள்ளவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது,” என்கிறார் அந்த அதிகாரி. 


 

.