This Article is From Nov 30, 2018

ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக போலீஸ் மீது ‘கிரிமினல்’ வழக்கு தொடர்ந்த சிபிஐ!

சிபிஐ, தமிழக போலீஸ் மற்றும் வருவாய் துறை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது

ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக போலீஸ் மீது ‘கிரிமினல்’ வழக்கு தொடர்ந்த சிபிஐ!

தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தாவுக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக பெருந்திரளான மக்கள், சில மாதங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தைக் கலைக்க தமிழக போலீஸ் தரப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அமைப்பு விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிபிஐ, தமிழக போலீஸ் மற்றும் வருவாய் துறை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22, 23 ஆம் தேதிகளில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இது ஒருபுறமிருக்க, தூத்துக்குடி கலவரம் குறித்து சிபிஐ விசாரணை சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. இதையடுத்து சிபிஎம் கட்சியைச் சேர்ந்த கே.அர்ஜுனன், தமிழக காவல் துறை மற்றும் வருவாய் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் மீது, கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, புகார் அளித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்கள் சட்டத்தை மதிக்காதது, கொள்ளையில் ஈடுபட்டது, கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் கீழ் போலீஸ் அதிகாரிகள் மீதும் வருவாய் துறை அதிகாரிகள் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

.