This Article is From May 29, 2020

ஜெகன் அரசுக்கு பின்னடைவு! மாநிலதேர்தல் ஆணையர் நீக்கத்தை ரத்துசெய்தது ஆந்திர உயர்நீதி மன்றம்

பஞ்சாயத்து ராஜிய சட்டத்தில் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி அரசு திருத்தம் கொண்டுவர, அவசர சட்டத்தை ஏற்படுத்தியது. இதன்படி, 5 ஆண்டுகளாக இருக்கும் மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் செல்லாது என்று ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

ஜெகன் அரசுக்கு பின்னடைவு! மாநிலதேர்தல் ஆணையர் நீக்கத்தை ரத்துசெய்தது ஆந்திர உயர்நீதி மன்றம்

ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஜெகன் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad:

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மாநில தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ் குமாரை பதவி நீக்கம் செய்தது. இதனை ரத்து செய்த ஆந்திர உயர் நீதிமன்றம், நிம்மகட்டாவை மீண்டும் மாநில தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு நியமித்துள்ளது. இதேபோன்று ஜெகன் அரசின் மேலும் சில உத்தரவுகளையும் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்திருக்கிறது. 

பஞ்சாயத்து ராஜிய சட்டத்தில் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி அரசு திருத்தம் கொண்டுவர, அவசர சட்டத்தை ஏற்படுத்தியது. இதன்படி, 5 ஆண்டுகளாக இருக்கும் மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் செல்லாது என்று ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி, மாநில தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ் குமார், உள்ளாட்சி தேர்தலை 6 மாதங்களுக்கு ஒத்தி வைத்தார். அரசியல் காரணங்களுக்காக அவர் இவ்வாறு செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்த நிலையில், ஜெகன் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்கு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.கே. மகேஷ்வரி மற்றும் நீதிபதி சத்யநாராயண மூர்த்தி ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜெகன் அரசு நீக்கிய நிம்மகட்டா மீண்டும் மாநில தேர்தல் ஆணையராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதேபோன்று மாநில தேர்தல் ஆணையரின் பதவிக் காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம், மாநில அரசுக்கு கிடையாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொறுப்பேற்ற பின்னர், நிம்மகட்டா கூறுகையில், 'நான் எனது பணியை தொடங்கிவிட்டேன். கடந்த காலங்களில் செயல்பட்டதைப் போன்று மிகவும் நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் நான் செயல்படுவேன். அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வெகு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்' என்று தெரிவித்தார். 

ஆந்திர உயர் நீதிமன்றத்தால் ஜெகன் அரசுக்கு தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து கொண்டு வருகிறது. சமீபத்தில், மருத்துவர் சுதாகர் கைது வழக்கை சிபிஐக்கு மாற்றியது, மூத்த போலீஸ் அதிகாரி ஏ.பி. வெங்கடேஸ்வர ராவை இடை நீக்கம் செய்ததை ரத்து செய்தது ஆகியவை சில உதாரணங்களாகும்.

மே 30-ம்தேதியான நாளையுடன், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்கிறது. 

ஆந்திராவில் 3,200 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 பேர் உயிரிழந்துள்ளனர். மே 26 நிலவரப்படி 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

.