This Article is From Feb 14, 2020

கடன் சுமை 5 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை; வைகோ

மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிமுக அரசு உயர்த்தி வருகிறது. இதற்காகவே டாஸ்மாக் மதுக்கடைகள் மேலும் மேலும் திறக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,293 டாஸ்மாக் மதுக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

கடன் சுமை 5 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை; வைகோ

தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் மொத்தத்தில் ஏமாற்றமே அளிக்கிறது - வைகோ

தமிழகத்தின் கடன் சுமை, சுமார் 5 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் இந்த அரசின் சாதனை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

இது தொடர்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், 2011 ஆம் ஆண்டில் அதிமுக அரசு பொறுப்பேற்ற போது, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 610 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை, சுமார் 5 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் இந்த அரசின் சாதனை. 

மத்திய வரி பங்கீட்டில் தமிழகம் பெரும் இழப்புக்கு ஆளாகி உள்ளது. மேலும் வருவாய் பற்றாக்குறை 22 ஆயிரத்து 226 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஆதாரம் எங்கே இருக்கிறது? மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து திட்டவட்டமான கருத்தை முன் வைக்காமல், நீட் தேர்வைத் திணித்தது போல புதிய கல்விக் கொள்கையையும் செயல்படுத்த அதிமுக அரசு முனைந்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் மூடப்பட்டு வரும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பதை அதிமுக அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயல் திட்டங்களோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை.

மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிமுக அரசு உயர்த்தி வருகிறது. இதற்காகவே டாஸ்மாக் மதுக்கடைகள் மேலும் மேலும் திறக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,293 டாஸ்மாக் மதுக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

2016 இல் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றபோது, டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அரசு குப்பைக் கூடையில் வீசி எறிந்துவிட்டது. ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை எனும் பாஜக அரசின் திட்டத்தை அறிவித்திருப்பது பொதுவிநியோக முறையையே சீர்குலைத்துவிடும்.

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம், அயலகத் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கை அமைத்தல், பணிபுரியும் பெண்களுக்கு 13 இடங்களில் அரசு விடுதிகள், கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி போன்ற வரவேற்கத்தக்க அறிவிப்புகள் தவிர, தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் மொத்தத்தில் ஏமாற்றமே அளிக்கிறது" என்று அவர் கூறியுள்ளார். 

.