This Article is From Apr 29, 2020

நாடு முழுதும் இளங்கலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு! கடுமையாக எதிர்க்கும் முன்னாள் துணைவேந்தர்!!

இந்த இரண்டு குழுக்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி நாடு முழுவதும் அனைத்து இளங்கலை படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து யூஜிசி ஆலோசித்துள்ளது.

நாடு முழுதும் இளங்கலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு! கடுமையாக எதிர்க்கும் முன்னாள் துணைவேந்தர்!!

பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டுதல்கள் அடுத்துவருகிற இரு தினங்களில் வெளியிடப்படும்

New Delhi:

நாடு முழுவதும் 31 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் கல்வி நிலையங்கள் சார்ந்த அணைத்து நடவடிக்கைகளும் முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் தற்போது நிலுவையில் உள்ள வருடாந்திர,பருவத்தேர்வுகள் மற்றும் கல்வி காலஅட்டவணை(academic calendar) போன்றவற்றிற்கான வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (UGC) அதிகாரி ஒருவர் என்டிடிவிக்கு உறுதிப்படுத்தியிருக்கிறார்.

முன்னதாக இரண்டு நிபுணர்கள் குழு தங்கள் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளுக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து தற்போது ஆலோசித்து வரும் உயர்கல்வி ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் அதிகாரி, பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டுதல்கள் அடுத்துவருகிற இரு தினங்களில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முழு முடக்க நடவடிக்கையினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வருடாந்திர,பருவத்தேர்வுகள், கல்வி காலஅட்டவணை(academic calendar) மற்றும் புதிய சேர்க்கைகள் குறித்து விவாதிக்க யூஜிசி முன்னதாக ஒரு கலந்தாலோசனைக் கூட்டத்திற்றிக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட இரு குழுக்கள் அளித்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்திருந்தன.

தற்போதைய நெருக்கடியினை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி அமர்வு ஜூலைக்கு பதிலாக செப்டம்பர் முதல் தொடங்கலாம் என்றும் இதற்கிடையில் பல்கலைக்கழகங்கள் இணையவழி தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் முறையே இரு குழுக்களும் பரிந்துரைத்துள்ளன. எழுத்துத் தேர்வுகள் முழு முடக்க நடவடிக்கைக்குப் பின் தொடங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மாற்றுக் கல்வி கால அட்டவணைகளில் நடைபெற இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஹரியானா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில் ஒரு குழுவும்,

இணையவழிக் கல்வியை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பரிந்துரைகளை வழங்க இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (IGNOU) துணைவேந்தர் நாகேஷ்வர் ராவ் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த இரண்டு குழுக்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி நாடு முழுவதும் அனைத்து இளங்கலை படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து யூஜிசி ஆலோசித்துள்ளது.

இளங்கலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடவது என்பது முன்னதாக தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ல் குறிப்பிடப்பட்டிருந்தது என பல கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் வே. வசந்தி தேவியிடம் பேசியபோது, இந்த ஆலோசனைகள்  நடைமுறையாக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.

மேலும், “மாணவர்கள் ஏற்கெனவே ஒரு பொதுத்தேர்வினை எழுதித்தான் கல்லூரியில் சேர்கிறார்கள். இந்த நிலையில் மற்றொரு பொதுத் தேர்வுக்கான அவசியம் எங்கு உருவாகிறது? இந்த ஆலோசனைகள் கல்வியை முற்றிலும் மத்தியத்துவப்படுத்தலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது. இது மாதிரியான ஆலோசனைகள் என்பது தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019-ன் ஒரு பகுதிதான். இதன் மூலமாக மாநில கல்வி அதிகாரங்கள் பறிக்கப்படும்.

சர்வதேச அளவில் பல நாடுகளில் மாகாணங்கள்தான் தங்கள் பகுதியின் கல்வியை வரையறுக்கிறது. சர்வதேச அளவில் இவ்வாறு இருக்கக்கூடிய நிலையில் நம்முடைய நாட்டில் மேற்கண்டவாறு சிந்திப்பது முரண்பட்டதாக உள்ளது. அடுத்ததாக இவ்வாறு அனைத்து இளங்கலை பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு அமல்படுத்தப்படுமாயின் மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களை நோக்கி பயணிக்கத் தொடங்குவார்கள். இது காசு உள்ளவனுக்கு மட்டுமே கல்வி என்கிற சூழலை உருவாக்கும். எனவே இம்மாதிரியான ஆலோசனைகள் கடுமையாக எதிரக்கப்பட வேண்டியவை.“ என வசந்தி தேவி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 16-ம் தேதி முதல் நாட்டில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                                               -கார்த்தி.ரா

Click here for more Education News
 

.