This Article is From Sep 05, 2018

'டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும்!’- அன்பழகன் வலியுறுத்தல்

குட்கா ஊழல் குறித்து முதன் முறையாக வழக்கு தொடர்ந்தது அன்பழகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது

'டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும்!’- அன்பழகன் வலியுறுத்தல்

குட்கா ஊழல் தொடர்பாக இன்று சென்னையில் தமிழக டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், ‘தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

குட்கா ஊழல் குறித்து முதன் முறையாக வழக்கு தொடர்ந்தது அன்பழகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வழக்கில் தான், சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் சிபிஐ ரெய்டு குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ள அன்பழகன், ‘ராஜேந்திரனுக்கு தமிழக காவல் துறையின் டிஜிபி-யாக இருக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இப்படி பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் அதிகாரிகள், எந்த வித சிக்கலிலும் மாட்டமல் இருக்க வேண்டும். ஆனால், டிஜிபி வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. எனவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்றவர் தொடர்ந்து,

‘குட்கா ஊழல் வழக்கைப் பொறுத்தவரை, விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகத் தான் தெரிகிறது. அதே நேரத்தில் ஊழல் செய்தவர்கள் மீது வழக்கு தொடரப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரு வேளை ரெய்டுக்குப் பிறகும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றால், மீண்டும் நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டியிருக்கும்’ என்றார் விரிவாக.

2018 ஆம் ஆண்டு, ராஜேந்திரனுக்கு இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம், குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் குட்கா அதிபர் மாதவ ராவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, அவரது கிடங்கிற்கு சீல் வைத்தது. குட்கா அதிபர் மாதவ ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெயர்களின் அடிப்படையில் ஏராளமானோரின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை செய்து வருகிறது.

தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் தரப்பட்டதாக சோதனை நடத்தும் ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, வருமான வரித் துறையினர் மாதவ ராவ் அலுவலகத்தில் சோதனையிட்டு அவரின் டைரியை கைப்பற்றிய போது, அதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.