This Article is From Mar 26, 2019

சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

ஆனால், இந்த ஒரு தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது. இதை எதிர்த்து, கட்சி தலைவரான ஜி.கே.வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் என்ற பிரதான மனு மீதான விசாரணையை தேர்தலுக்கு பிறகு ஒத்திவைத்தனர்.

சைக்கிள் சின்னம் வழங்க குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், தஞ்சாவூரில் மட்டும் அக்கட்சி போட்டியிடுவதால் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


 

.