This Article is From Mar 18, 2019

ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு!!

சைக்கிள் சின்னத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு!!

ஹைலைட்ஸ்

  • தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். நடராஜன்
  • தஞ்சை தொகுதி மட்டும் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
  • அதிமுக கூட்டணியில் தமாகா இடம்பெற்றுள்ளது

மக்களவை தேர்தலில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரபா சாஹு வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தஞ்சை தொகுதியை மட்டுமே அதிமுக ஒதுக்கியுள்ளது.

தஞ்சை மக்களவை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக என்.ஆர். நடராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கட்சிக்கு தேர்தல் சின்னமாக மிதிவண்டியை ஒதுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில், தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரபா சாஹு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

1996-ல் ஜி.கே. மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமாக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக இருந்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, மூப்பனாரின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் ஜி.கே. வாசன் 2002-ல் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். 

பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அக்கட்சிக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட ஒரேயொரு இடம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 

1996 மக்களவை தேர்தலில் திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தன. இதில் தமாகா 20 இடங்களிலும் திமுக 17 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது. 

.