This Article is From Feb 12, 2019

தமிழகத்தில் டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை! - சட்டப்பேரவையில் உறுதி!

தமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மணிகண்டன் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை! - சட்டப்பேரவையில் உறுதி!

தமிழகத்தில் டிக் டாக் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் இந்த செயலியை இளைஞர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த நிலையில், நாளடைவில் இந்த செயலி அனைத்து வயதினரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறி வருகிறது. ஒரு பாடலையோ, திரைப்பட டயலாக்குகளையோ, அல்லது பின்னணி இசையையோ பின்னால் ஓடவிட்டு, அதற்கு ஏற்றவாறு நடனமாடுவதும், வசனம் பேசுவதும், நடித்து காட்டுவதும் என செய்து வருகின்றனர்.

இதனிடையே இதில், ஆபாச காட்சிகள் அதிகரித்து வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். சிறார்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து வயதினரும் இந்த செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் இதில் அதிகரிக்கும் ஆபாச சைகைகள், நடனங்கள், வசனங்கள் மூலம் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

மேலும், டிக் டாக் செயலியை சாதிய பெருமைகளுக்காவும் இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தனது சாதி பெருமை குறித்த பாடலை பின்னணியில் இசைக்க விட்டு, அதற்கு தாங்கள் நடந்து வருவது போன்றும், படைகளுடன் வருவது போலவும் என பல்வேறு விதமாக வீடியோ எடுத்து பதிவு செய்கின்றனர். இதில் மற்ற சாதியினரை இழிவு படுத்துவது போலவும் காட்சிகளை பதிவு செய்கின்றனர். இது போன்ற டிக் டாக் வீடியோ பதிவுகள் அதிகம் இடம்பெறும் போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக மற்ற சாதி மக்களும் வீடியோ எடுத்து பதிவு செய்கின்றனர். தொடக்கத்தில் செயலி சண்டையாக மட்டும் இருக்கும் இது பின்னர் இரு பிரிவினருக்குமான நேரடி மோதலை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, பல்வேறு ஆபாச செயலுக்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மணிகண்டன், புளுவேல் கேமை போன்று டிக் டாக் செயிலியும் தடைசெய்ய கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அவர் உறுதியளித்தார்.

.