This Article is From Nov 08, 2019

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது: ரஜினிகாந்த்

நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன். நான் பாஜகவில் சேரப்போவதாக அவர்கள் சொல்வார்கள். முடிவெடுக்க வேண்டியது நான்தான் என ரஜினிகாந்த் கூறினார்.

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது: ரஜினிகாந்த்

கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன் - ரஜினிகாந்த்

தமிழகத்தில் ஆளுமையான சரியான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், திருவள்ளூவர் அவர் ஞானி, சித்தர். ஞானி, சித்தர்களை எந்த மதம், ஜாதிக்குள்ளும் அடைக்க முடியாது. திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர். அதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. அவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர். 

பாஜக அவர்களது ட்வீட்டரில் காவி உடையுடன் வள்ளுவர் படத்தை வெளியிட்டது அது, அவர்களது விருப்பம். நாட்டில் இவ்வளவு பிரச்னை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு அதை, இவ்வளவு சர்ச்சையாக்கியது சில்லியாக இருக்கிறது.

என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சிக்கிறார்கள். ஆனால் நானும் சிக்கமாட்டேன், திருவள்ளுவரும் சிக்க மாட்டார் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சில நிமிடங்களில், மீண்டும் தனது வீட்டு வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்தி விட்டன என்றார். 

நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன். நான் பாஜகவில் சேரப்போவதாக அவர்கள் சொல்வார்கள். முடிவெடுக்க வேண்டியது நான்தான். அதற்காக, அவர்கள் என்னை நம்பிதான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. 

கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பதவியேற்கும் வரை திரைப்படங்களில் நடித்தார். தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது. 

அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதிகாக்க வேண்டும். மிசாவில் ஸ்டாலின் கைது பற்றி எனக்குத் தெரியாது. தெரியாதது பற்றி கருத்துச் சொல்ல முடியாது என்றார். 

.