This Article is From Dec 12, 2018

ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி - அசோக் கெலாட் முதல்வராக அதிக வாய்ப்பு

3 முறை முதல்வராக இருந்த அசோக் கெலாட் தனக்கு போட்டியளாராக கருதப்படும் சச்சின் பைலட்டின் வீட்டிற்கு சென்று ஆதரவு திரட்டியுள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் ரேஸில் முந்துகிறார் அசோக் கெலாட்

Jaipur/New Delhi:

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இங்கு கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராக பொறுப்பேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இங்கு பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்குமட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, மீதமுள்ள 199 இடங்களில் கடந்த 7-ம்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி காங்கிரஸ் கட்சி 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கு 73 இடங்கள் கிடைத்துள்ளன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 இடங்கள் கிடைத்திருக்கின்றன.

பெரும்பான்மை பெறுவதற்கு 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அந்த இலக்கை காங்கிரஸ் கட்சி அடைந்திருக்கிறது. இருப்பினும், வலிமையான அரசை அமைக்கும் நோக்கில் அக்கட்சி பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை நாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் காங்கிரசை பொறுத்தளவில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட்தான் கட்சியின் முகங்களாக அறியப்பட்டு வருகின்றனர். இவர்களில் ஒருவர்தான் முதல்வராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

இந்த நிலையில், ஏற்கனவே 3 முறை முதல்வராக இருந்த அசோக் கெலாட், சச்சின் பைலட் வீட்டிற்கு நேற்று நேரில் சென்று ஆதரவு கேட்டுள்ளார். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.