This Article is From Jul 04, 2020

தங்கத்திலும் முககவசமா! ஆச்சரியத்தில் ஆழ்த்திய புனேவை சேர்ந்த நபர்!!

கொரோனா தொற்றால் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் அல்லது போதிய அளவில் மருத்துவம் செய்துக்கொள்ள பொருளாதார வசதியில்லாமல் நாள் தோறும் 300-400 மக்கள் மடிந்துக்கொண்டிருக்கக்கூடிய இந்தியாவில்தான் ரூ .2.89 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட முககவசத்தினை பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ .2.89 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட முககவசத்தினை சங்கர் குராடே அணிந்துள்ளார்

Pune:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6.48 லட்சமாக உயர்ந்திருக்கக்கூடிய நிலையில் மக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்களும் அரசும் வலியுறுத்தியுள்ளது. புனே மாவட்டத்தைச் சேர்ந்த பிம்ப்ரி-சின்ச்வாட்டில் வசிக்கும் ஷங்கர் குராடே அரசின் இந்த உத்தரவினை வித்தியாசமான முறையில் நிறைவேற்றியிருக்கிறார்.

ரூ .2.89 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட இந்த முககவசத்தினை அணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஆபரணங்களை அணிவதை அதிகமாக விரும்பும் குராடேவுக்கு சமூக ஊடகங்களில் வெள்ளி முககவசம் அணிந்த ஒருவரைப் பார்த்தவுடன் இந்த தனித்துவமான யோசனை தோன்றியுள்ளது. இந்த சிந்தனையிலிருந்து உருவானதே இந்த தங்க முககவசம்.

"கோலாப்பூரில் ஒரு நபர் வெள்ளி முககவசம் அணிந்த ஒரு வீடியோவை நான் சமூக ஊடகங்களில் பார்த்தேன், பின்னர் ஒரு தங்க முககவசத்தை வைத்திருக்க வேண்டும் என்கிற யோசனைக்கு ஆளானேன். பொற்கொல்லரிடம் பேசினேன், அவர் ஒரு வாரத்தில் இந்த ஐந்தரை பவுண்டு தங்க முககவசத்தை எனக்குக் கொடுத்தார்." என்கிறார் குராடே.

"எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கத்தை நேசிக்கிறார்கள், அவர்களும் இந்த தங்க முககவசத்தை கேட்பார்களெனில் அவர்களுக்கும் நான் தயாரித்து கொடுக்க தயங்க மாட்டேன். தங்க முககவசத்தை அணிந்தால் கொரோனா வைரஸிலிருந்து நான் பாதிக்கப்படாமல் இருப்பேனா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அரசாங்கத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றும்போது வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும்." என குராடே குறிப்பிட்டுள்ளார்.

சிறு வயதிலிருந்தே தங்கம் மீது தீராத மோகம் கொண்ட இவர், அனைத்து விரல்களிலும் தங்க மோதிரங்கள், மணிக்கட்டில் தங்க வளையல்கள் மற்றும் கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலிகளை அணிந்திருக்கிறார்.

கொரோனா தொற்றால் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் அல்லது போதிய அளவில் மருத்துவம் செய்துக்கொள்ள பொருளாதார வசதியில்லாமல் நாள் தோறும் 300-400 மக்கள் மடிந்துக்கொண்டிருக்கக்கூடிய இந்தியாவில்தான் ரூ .2.89 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட முககவசத்தினை பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

.