தெலங்கானாவில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது
ஹைலைட்ஸ்
- பொதுக் கூட்டத்தில் இந்தக் கருத்தை ராவ் கூறியுள்ளார்
- முஸ்லிம் இட ஒதுக்கீடுக்கு பிரதமர் ஒத்துழைக்கவில்லை, ராவ்
- அனைவரையும் அரவணைக்க பிரதமருக்குத் தெரியவில்லை, ராவ்
Hyderabad: தெலங்கானா மாநிலத்தின் முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ், ‘பிரதமர் மோடிக்கு இந்து - முஸ்லிம் நோய் இருக்கிறது' என்று விமர்சனம் செய்துள்ளார்.
தெலங்கானாவில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர் ராவ், ‘நான் முந்தைய தேர்தலில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 12 சதவிகிதம் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தேன். இந்த வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியாததற்குக் காரணம், பிரதமர் அலுவலகம் அதற்கு ஒப்புதல் கொடுக்காததனால் தான்.
பிரதமர் மோடிக்கு இது குறித்து நான் 30 கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், இந்து மற்றும் முஸ்லிம் விவகாரம் குறித்து பேச அவருக்கு விருப்பமில்லை. அனைவரையும் சமமாக நடத்தும் மனதும் பக்குவமும் பிரதமருக்கு இல்லை' என்று உரையாற்றினார்.
சந்திரசேகர் ராவின் கருத்துக்கு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ‘தெலங்கானா முதல்வர், பிரதமர் குறித்து பேசியிருப்பது சட்ட சாசனத்துக்கு எதிரானது. மிகவும் கண்டிக்கத்தக்கது. மதத்தை வைத்துப் பேசினால், தெலங்கானா மக்கள் யாரையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்' என்று காட்டமாக பதில் கருத்து கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் - பாஜக அல்லாத மூன்றாவது அணி வலுப்பெற வேண்டுமென்று தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார் சந்திரசேகர் ராவ்.