This Article is From Jan 01, 2019

தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது பிளாஸ்டிக் தடை

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது

தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது பிளாஸ்டிக் தடை

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதேநேரம் தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதன்படி, உணவுப் பொட்டலங்கள் கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒட்டும் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாகோல் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பாக்கெட்கள், பிளாஸ்டிக்கால் ஆன உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிளாஸ்டிக் ஒழிப்பை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் , பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வீட்டில் இருந்தே பாத்திரங்களைக் கொண்டு வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்புக்கு மக்களிடையே போதிய ஒத்துழைப்பு இல்லை. இதனால் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களால் பார்சல் விலை உயரும் எனவும், இணையதளம் மூலம் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்பவர்களும், பொதுமக்களும் விலை உயர்வை சந்திக்க நேரிடும் எனவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர். மொத்தமாக ஒரு பார்சலுக்கு ரூ.35 கூடுதல் செலவாகும். இந்தத் தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வசூலிக்கப்படும் என்று ஹோட்டல் சங்கத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இனி துணிப்பைகளும் மஞ்சள் பைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் காலம் தொடங்கிவிட்டது.

.