மத்திய அரசுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா நேரடி மோதல்

கொல்கத்தாவுக்கு விசாரணைக்காக சென்ற சிபிஐ அதிகாரிகளை கைத செய்ததால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவுக்கு எதிராக வழக்கு தொடர சிபிஐ முடிவு செய்திருக்கிறது. இந்த பிரச்னையில் மம்தாவுக்கு பல்வேறு மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார்.

ஹைலைட்ஸ்

  • கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு செய்திருந்தது
  • சிபிஐ மூலம் மத்திய பாஜக அரசு அரசியல் செய்கிறது என்கிறார் மம்தா
  • மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் மம்தாவுக்கு ஆதரவு
Kolkata:

மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலிசார் கைது  செய்தனர். சிபிஐ விசாரணையை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார். எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலிசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 
பிரச்னை பரவியதை தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீசார் கொல்கத்தாவில் குவிக்கப்பட்டனர். அவர்கள் சிபிஐ அலுவலகம் மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்  கொண்டனர். 

மம்தாவுக்கு ஆதரவாக அவரது கட்சி தொண்டர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேற்கு வங்கம் முழுவதும் பதற்றம் காணப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை தொடர்பாக பாஜக தலைவர்கள் மம்தா பானர்ஜியை கண்டித்து வருகின்றனர். அங்கு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என பாஜக தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். 

மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கொல்கத்தா போலீசாரும், சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் போலீஸ் தரப்பில் மாயமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரிக்க கொல்கத்தா போலீஸ் கமிஷ்னர் ராஜிவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதில் அவர் ஆஜராகததால் சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவுக்கு விசாரணைக்காக வந்தனர். அப்போதுதான் கைது, தர்ணா போராட்டங்கள் நடந்தன. 
 

More News