This Article is From Mar 27, 2019

ஏப்.9ம் தேதிக்கு பின் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது! - தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என்ற உத்தரவுகள் நடைமுறைக்கு வரும்

ஏப்.9ம் தேதிக்கு பின் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது! - தேர்தல் ஆணையம்

ஏப்ரல் 9ம் தேதிக்கு பிறகு எந்த நிறுவனமும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது


ஏப்.9ம் தேதிக்கு பின் எந்த நிறுவனமும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது.

இதில், திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் கடைசி நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, வரும் 29ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கலாம். பின்னர் அன்று மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது, ஏப்ரல் 9ம் தேதிக்கு பிறகு எந்த நிறுவனமும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என்றும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என்ற உத்தரவுகள் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.

அமமுகவிற்கு சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்கும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் வரும் 29ம் தேதி நிறைவடைய உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும் எனக் கூறியுள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.46 கோடி பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

.