This Article is From Apr 04, 2019

'மாற்று அரசியலுக்கு இந்தியா தயாராகி விட்டது' : என்.டி.டி.வி.க்கு பிரகாஷ் ராஜ் பேட்டி

நடிகர் பிரகாஷ் ராஜ் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் நெருங்கிய நண்பர் ஆவார். பெங்களூருவை சேர்ந்த கவுரி கடந்த 2017-ல் வலதுசாரி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பிரகாஷ் ராஜ் அரசியலுக்கு திரும்ப முக்கிய காரணமாக அமைந்தது.

தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவது குறித்தும் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • பெங்களூரு மத்திய தொகுதியில் பிரகாஷ் ராஜ் போட்டி
  • சுயேட்சையாக தேர்தல் களம் காண்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்
  • கவுரி லங்கேஷின் படுகொலைக்கு பின்னர் அரசியல் பாதைக்கு திரும்பியுள்ளார்
Bengaluru:

கர்நாடகாவும், இந்தியாவும் மாற்று அரசியலுக்கு தயாராகி விட்டது என்று நடிகரும், பெங்களூரு மத்திய தொகுதியின் சுயேச்சை வேட்பாளருமான பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். 

என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் பிரகாஷ் ராஜ் கூறியதாவது-

நான் பிரசாரம் செய்யும் கருத்துகள் மக்களை சென்றடைகிறது. தேர்தல் என்பது வேட்பாளருக்கும், வாக்காளர்களுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் என்றுதான் நான் கூறுவேன். 

தேர்தல் முடிந்து விட்டால் வாக்கு கேட்டு வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். இதனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வருகிறேன். இது அவர்களுடைய தவறு அல்ல. 

வாக்காளர்களாகிய நாம், நம்மையை குற்றம்சாட்டிக் கொள்ள வேண்டும். நிர்வாகமின்மை, ஊழல் உள்ளிட்டவைகளுக்கு சரியான நபரை நாம் தேர்வு செய்யாததுதான் காரணம். 

இன்றைக்கு கர்நாடகாவும், இந்தியாவும் மாற்று அரசியலுக்கு தயாராகி வருகிறது. பெங்களூரு மத்திய தொகுதியின் உறுப்பினராக பி.சி. மோகன் உள்ளார். அவரை அறியாதவர்கள் கூட என்னை அறிந்து வைத்திருக்கிறார்கள். மற்றொரு வேட்பாளர் ரிஸ்வானை தெரியாதவர்கள் கூட என்னை தெரிந்து வைத்துள்ளனர். 

நான் ஒரு நடிகன் என்பதற்காக மட்டும் இங்கு பிரபலமாக இருக்கவில்லை. நான் ஒரு எழுத்தாளன். மக்களின் பிரச்னைகளுக்காக கடந்த 25 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறேன். என்னுடைய எண்ணம் என்னவென்று வாக்காளர்களுக்கு தெரியும். 

மக்கள் என்னை வெறும் நடிகனாக அல்லாமல் ஆளுமையாக பார்க்கிறார்கள். கவுரி லங்கேஷின் படுகொலை என்னை குற்ற உணர்வை ஏற்படுத்தியது. நான் அன்றைக்கு அமைதியாக இல்லாமல் இருந்திருந்தால், கவுரிக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தால் அவர் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார். அவரை திரும்ப கொண்டுவர முடியாது. ஆனால், அவருக்கு நேர்ந்த சம்பவம் மற்றொருவருக்கு நேரக் கூடாது. 
இவ்வாறு அவர் கூறினார். 

.