This Article is From May 25, 2020

இரண்டு மாதங்களுக்கு பிறகு தொடங்கும் விமான போக்குவரத்து! முக்கியத் தகவல்கள்!!

உள்நாட்டு விமான பயணிகள் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், பல மாநில அரசுகள் விமான பயணத்திற்கு பிறகு தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கியுள்ளன. இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு மாதங்களுக்கு பிறகு தொடங்கும் விமான போக்குவரத்து! முக்கியத் தகவல்கள்!!

பயண நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக விமான நிலையத்தை பயணிகள் அடைவதை உறுதி செய்ய வேண்டும்

New Delhi:

நாடு முழுவதும் 1.3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த விமான சேவை தற்போது மறு தொடக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது.

உள்நாட்டு விமான பயணிகள் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், பல மாநில அரசுகள் விமான பயணத்திற்கு பிறகு தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கியுள்ளன. இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • உள்நாட்டு விமான போக்குவரத்தினை தொடங்க மாநில அரசுகளிடம் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்திருந்தார்.  தற்போது ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் விமான போக்குவரத்து தொடங்கப்படுவதை அமைச்சர் உறுதி செய்துள்ளார். ஆந்திராவில் நாளை விமான போக்குவரத்து தொடங்கப்படுகிறது. அதே போல மேற்கு வங்கத்தில் 28-ம் தேதி போக்குவரத்து தொடங்கப்படுகிறது.
  • உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக, பயணிகள் ஆரோக்ய சேது செயலியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்றும், பயணிகள் அனைவரும் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், பயண நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக விமான நிலையத்தை பயணிகள் அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், காத்திருப்பின் போது தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்  என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • விமான கட்டணங்களை பொறுத்த அளவில் குறைந்தபட்சமாக 2,000லிருந்து 18, 600 என அடுத்த மூன்று மாதங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளியை கணக்கில் கொண்டு விமானத்தில் நடு இருக்கைகள் காலியாக விடுவது குறித்த யோசனைகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு இருக்கைகள் காலியாக விடும் பட்சத்தில் கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
  • பல மாநிலங்கள் விமான போக்குவரத்தினை பயண்படுத்துபவர்களை தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.  மத்திய அரசு, உள்நாட்டு விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என்ற கூறியிருந்தது, இந்நிலையில் பாஜக ஆளக்கூடிய மாநிலங்களான அசாம் மற்றும் உத்தரப் பிரதேசம் தனிமைப்படுத்துதலை கட்டாயமாக்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் விமான பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனையில் எதிர் மறையாக இருந்தால் ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • இதே போல மற்ற மாநிலங்களும் தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திற்குள் நுழையும் வெளி மாநில விமான பயணிகள் 14 நாள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களில் விமான பயணிகள் 14 நாள்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் அசாம் மாநிலத்தினை பொறுத்த அளவில் வீடு மற்றும் அரசு முகாம்கள் என இரண்டு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் கோவாவை பொறுத்த அளவில், இந்த யூனியன் பிரதேச அரசுகள் விமான பயணிகளை கட்டாயம் சோதனைக்கு உட்படுத்துகிறது. மிசோரத்திலும் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் விமான சேவையை ஏற்க கால அவகாசம் கோரியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் காரணமாக இரண்டு விமான நிறுத்தங்கள் பெருத்த சேதத்தினை சந்தித்துள்ளது.
  • நாட்டில் அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநிலம் உள்நாட்டு விமான போக்குவரத்தினை மாநிலத்தில் அனுமதிக்க கால அவகாசம் கோரியிருந்த நிலையில் தற்போது மும்பையிலிருந்து 25 விமானங்கள் இயங்க அனுமதியளித்துள்ளதாக கடைசி நேரத்தில் கூறியுள்ளது.
  • இவ்வாறு விமான சேவை செயல்பட அனுமதியளிக்கப்பட்ட பின்னர் இரண்டு சுங்க அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் மட்டும் 20 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் நடைமுறை ரீதியாகக் கையாளப்படும் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி முன்னதாக தெரிவித்திருந்தார். விமானத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படாத பட்சத்தில் தனிமைப்படுத்துதல் ஏன் என்கிற கேள்வியை அவர் எழுப்பியிருந்தார். தற்போது, அறிகுறியற்ற பயணிகள் இருக்கக்கூடும் என அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
  • கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 6,767 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 1,31,868 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,867 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.