This Article is From Sep 21, 2018

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து - முழு விவரம்

2015-ல் ஊரி முகாமில் நடந்த தாக்குதலின்போது 19 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே பேச்சவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது.

இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்றிருந்த இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கு சம்மதம் தெரிவித்திருந்தது.

ஹைலைட்ஸ்

  • காஷ்மீரில் 3 காவலர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்தியா முடிவு
  • இம்ரானின் கோரிக்கையை ஏற்று சந்திப்புக்கு சம்மதித்திருந்தது இந்தியா
  • 2015-க்கு பின்னர் இருதரப்புக்கும் இடையே சந்திப்பு நடைபெறவில்லை
New Delhi:

அமெரிக்காவில் நடைபெறம் ஐ.நா. மாநாட்டின்போது இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேசுவார்கள் என்று நேற்று அறிவிப்பு வெளியானது. அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக அந்த அறிவிப்பு அதிரடியாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் 3 போலீசாரை கடத்தி தீவிரவாதிகள் கொன்றனர். இதேபோன்று, ஜம்மு காஷ்மீருடனான உறவை குறிப்பிடும் வகையில் பாகிஸ்தான் அரசு 20 தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. அதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த புர்கான் வானியின் படமும் இடம்பெற்றுள்ளது. தீவிரவாதியான அவரை பாதுகாப்பு படையினர் கடந்த 2016-ல் சுட்டுக் கொன்றனர்.

இந்த இரு காரணங்களை சுட்டிக் காட்டி வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், “இம்ரான் கானின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. இந்த நிலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் அர்த்தமற்றது. இம்ரான் கான் கோரிக்கை வைத்தபோது, பாகிஸ்தான் ஏதோ நல்ல விதமாகத்தான் நடந்து கொள்கிறது என நம்பினோம். ஆனால், மிக மோசமான உள்நோக்கத்துடன்தான் இம்ரான் கான் இந்தியாவுக்கு கோரிக்கை வைத்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 3 போலீசார் தீவிரவாதிகளால் இன்று கொல்லப்பட்டனர். முன்னதாக ராஜினாமா செய்யாவிட்டால் கொன்றுவிடுவோம் என போலீசாருக்கு மிரட்டல் விடுத்து தீவிரவாதிகள் வீடியோ அனுப்பி இருந்தனர். கடந்த செவ்வாயன்று எல்லை பாதுகாப்பு படை வீரரின் கழுத்தை அறுத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியத்தில் ஈடுபட்டது. பாகிஸ்தானின் இந்த மோசமான நடவடிக்கைகள்தான் இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்வதற்கு காரணமாக அமைந்து விட்டன.

.