This Article is From Jul 07, 2020

கேரளா தங்க கடத்தல் வழக்கு: முதல்வர் அலுவலகத்தை குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள்!

Kerala Gold Smuggling Case: கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தியுள்ளார்.

கேரளா தங்க கடத்தல் வழக்கு: முதல்வர் அலுவலகத்தை குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள்!

கேரளா தங்க கடத்தல் வழக்கு: முதல்வர் அலுவலகத்தை குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள்!

Thiruvananthapuram:

கடந்த வாரம் தங்க கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். 

ஜூலை 4ம் தேதி சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, ஊழியரின் ஒப்பந்தம் மாநில அரசால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும், முதல்வர் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியுமான (PRO) ஸரித் குமார் திங்களன்று கைது செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கில் 14 நாட்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார். எனினும், மற்றொரு பெண்ணான ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், அவர் இந்த பொருட்களுக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் என்றும் சுங்கத் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. 

ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் ஊழியர் என்றும், இவர் தற்போது கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறைகளுடன் இணைந்துள்ள நிறுவனங்களில் ஒன்றிற்கான தொடர்பு அதிகாரியாகவும் இருந்தார். இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வந்ததை தொடர்ந்து, அவரது ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் என்டிடிவிக்கு தகவல் தெரிவித்துள்ளன. 

இதைத்தொடர்ந்து, எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, குற்றம்சாட்டப்பட்டவருக்கும் கேரளாவின் ஐடி முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியவர், கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, இன்று காலை சிவசங்கர் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக ரமேஷ் சென்னிதாலா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, குற்றம்சாட்டப்பட்டப்பட்ட நபர் கேரள தகவல் தொழில்நுட்ப செயலாளரும், முதல்வர் பினராயி விஜயன் செயலாளருமானவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இதனால், இந்த வழக்கில் முதல்வரின் அலுவலகமும், அவரது செயலாளரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் சென்னிதாலா கூறியதாவது, ஐக்கிய அரபு அமிரகத்தின் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், "இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் இந்த மோசமான செயல் குறித்து விசாரிக்க உங்கள் உடனடி தலையீட்டை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

"இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசால் நியமிக்கப்பட்டுள்ளார், அவருக்கு எதிரான மாநில புலனாய்வு அறிக்கைகளை புறக்கணித்து, அவருக்கு எதிரான விசாரணையை கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு தொடங்கவில்லை" என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இது "கேரள முதல்வரின் அலுவலகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் தொடர்பு கொண்டிருப்பது நிரூபிக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். 

.