This Article is From Feb 10, 2019

திமுகவை விமர்சிப்பதா? கமல்ஹாசனுக்கு கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்..!

திமுக மீதான கமலின் விமர்சனம், தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குத்தான் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

திமுகவை விமர்சிப்பதா? கமல்ஹாசனுக்கு கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்..!

திமுகவை கமல்ஹாசன் விமர்சனம் செய்தது என் கவனத்துக்கு வரவில்லை, அதனால் தான் நான் கமலை கூட்டணிக்கு அழைத்தேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்றும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்றும் கமல்ஹாசன் அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறும்போது, நாட்டின் இறையாண்மையையும் மதச்சார்பின்மையையும் காப்பாற்ற மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. எங்கள் கரத்தை வலுப்படுத்த கமல் வர வேண்டும் எனவும், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் எனவும் அழகிரி அழைப்பு விடுத்திருந்தார். இது கூட்டணி கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திமுகவை கமல்ஹாசன் விமர்சனம் செய்தது தன் கவனத்துக்கு வரவில்லை என்றும் அதனால் தான் கமலை கூட்டணிக்கு அழைத்தேன் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணிதான் முடிவு செய்யும்.

பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். திமுக மீதான கமலின் விமர்சனம், தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குத்தான் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

.