This Article is From Jul 18, 2018

டெல்லிக்கு அருகே அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து… குழந்தைகள் சிக்கியுள்ளதால் பதற்றம்!

தலைநகர் புது டெல்லிக்கு அருகேயுள்ள நொய்டாவில் கட்டுமானப் பணி நடந்து வரும் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது

Greater Noida:

தலைநகர் புது டெல்லிக்கு அருகேயுள்ள நொய்டாவில் கட்டுமானப் பணி நடந்து வரும் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், கட்டடத்தில் வசித்து வந்த குழந்தைகள் உட்பட பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. 

இடிந்து விழுந்துள்ள கட்டடத்தில் 18 குடும்பங்கள் வசித்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து நடந்ததையடுத்து கட்டட முதலாளி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 8:30 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்ததை அடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உத்தர பிரதேச போலீஸ் 800 பேர் அங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து இடிபாடுகளை விளக்கி, உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியை செய்து வருகின்றனர். அதே நேரத்தில், போலீஸ் இடிந்து விழுந்த கட்டடத்திற்குள் யாரும் வராத வண்ணம் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதுவரை 3 பேரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உள்ளே குழந்தைகள் இருக்கலாம் என்று சந்தேகப்படுவதால், சம்பவம் குறித்த பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த விபத்து குறித்து இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடத்தின் அருகில் வசித்து வரும் மின்டு தேக்கா, ‘நேற்றிரவு நாங்கள் இரவு உணவருந்திக் கொண்டிருந்தோம். திடீரென்று ‘தம்’ என்ற ஒரு பெரும் சத்தம் காதுகளை துளைத்தன. நிலநடுக்கம் என்று அஞ்சி வீட்டிலிருந்து பதறியடித்துக் கொண்டு வெளியே வந்தோம். ஆனால், வெறும் புழுதிப் படலமாக இருந்தது. சற்று நேரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது தெரிந்தது’ என்று படபடப்புடன் நடந்த சம்பவம் குறித்து விளக்கினார்.

சம்பவம் சுமார் 8:30 மணிக்கு நடந்த நிலையில், போலீஸ் ஒரு மணி நேரம் கழித்தே வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. 

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மோப்ப நாய், உணரிகள், கேமராக்கள் உள்ளிட்டவையை வைத்து இடிபாடுகளில் யாரும் சிக்கியிருக்கிறார்களா என்று தொடர்ந்து தேடி வருகின்றன. 

இந்த சம்பவம் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கௌதம் புத் நகர் பகுதியின் மேஜிஸ்ட்ரேட் மற்றும் போலீஸை, தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

.