This Article is From Feb 22, 2019

‘பேசக்கூடாதுன்னு மிரட்றாங்க..!’- எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட சிறுமியின் தந்தை கதறல்

விஸ்வரூபம் எடுத்த இந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத் துறை தலையிட்டது

‘பேசக்கூடாதுன்னு மிரட்றாங்க..!’- எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட சிறுமியின் தந்தை கதறல்

சுகாதாரத் துறை, இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு கோவை அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • குழந்தைக்கு எச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • ஆனால், குழந்தையின் பெற்றோர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை
  • குழந்தையின் சகோதரருக்கும் எந்த பாதிப்பும் இல்லை

திருச்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் சித்ரா தம்பதியின் 2 வயதுப் பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவியிருக்கும் விவகாரம் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன்னர் கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறுமிக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, சிறுமியின் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்து, ரத்தம் ஏற்றியுள்ளது. இது நடந்து 6 மாதங்கள் கழித்து, அந்தக் குழந்தைக்கு மீண்டும் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், குழந்தையின் பெற்றோருக்கும் அந்தக் சிறுமியோடு பிறந்த இன்னொரு ஆண் குழந்தைக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்படி பெண் குழந்தைக்கு மட்டும் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டது என்று கேள்வி எழந்தது. 

இதையடுத்து விஸ்வநாதன், ‘நான் என் குழந்தையை வேறு எந்த மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லவில்லை. கோவை அரசு மருத்துவமனையில் மட்டும்தான் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முன்னர், நாங்கள் சிகிச்சைக்கு வந்தபோது, குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. அதிலிருந்துதான் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கும்' என்று பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். 

இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளது கோவை அரசு மருத்துவமனை தரப்பு. விஸ்வரூபம் எடுத்த இந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத் துறை தலையிட்டது. சுகாதாரத் துறை, இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு கோவை அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது. 

இப்படி தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் இந்த விவகாரத்தை அடுத்து, விஸ்வநாதன், கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது குழந்தையுடன் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், ‘நான் படிக்காதவன். விபரம் தெரியாதவன். என் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டது குறித்து ஊடகங்களிடம் பேசக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். குழந்தைக்கு சரியான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. அதனால்தான் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து முறையிடுகிறேன்' என்று கதறினார். 


 

.