பாகிஸ்தான் பிரதமர் கட்சியின் மாஜி எம்எல்ஏ இந்தியாவில் தஞ்சம் - பிரதமருக்கு உருக்கமான கோரிக்கை!

2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த சீக்கிய எம்.எல்.ஏ-வை கொலை செய்ததாக பால்தேவ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

தான் மீண்டும் பாகிஸ்தான் போகப் போவதில்லை என்று பால்தேவ் திட்டவட்டமாக தெரிவிக்கிறார். 

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் தஞ்சமடைய பிரதமருக்கு கோரிக்கை
  • 'பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது'
  • கடந்த ஒரு மாதமாக பஞ்சாபில் வசித்து வருகிறார் பால்தேவ்
Chandigarh:

பாகிஸ்தான் பிரதமர் இமரான் கானின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃபின் முன்னாள் எம்.எல்.ஏ பால்தேவ் குமார், இந்தியாவில் தஞ்சமடைய பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

தனது மனைவி பாவனா மற்றும் 2 குழந்தைகளுடன் பால்தேவ், கடந்த ஒரு மாதமாக பஞ்சாபில் தங்கி வருகிறார். 

இந்தியாவில் தஞ்சமடைய வேண்டும் என்ற தனது முடிவு குறித்து பால்தேவ், “பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணருவதில்லை. அங்கு அவர்களுக்கான உரிமையும் மறுக்கப்படுகிறது. தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும் கொலைகளும் அதிகரித்து வருகின்றன. நான் கூட 2 ஆண்டுகள் சிறையில் இருந்தேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். 

தான் மீண்டும் பாகிஸ்தான் போகப் போவதில்லை என்று பால்தேவ் திட்டவட்டமாக தெரிவிக்கிறார். 

“நான் முழு மனதோடுதான் இந்தியா வந்தேன். இந்த நாட்டில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று கோரிக்கை வைக்கும் பால்தேவ்,

“எனது சகோதரர்கள் பலர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். அங்கிருக்கும் பல இந்து மற்றும் சீக்கிய குடும்பத்தினர் இந்தியாவுக்கு வந்துவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு அங்கு மரியாதையே இல்லை. கட்டாய மதமாற்றம் அங்கு நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் சீக்கிய பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்பட்ட செய்தி சமீபத்தில் வெளியானது.

இம்ரான் கான் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவரும் மாறிவிட்டார்.” என்று புலம்புகிறார். 

2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த சீக்கிய எம்.எல்.ஏ-வை கொலை செய்ததாக பால்தேவ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.