This Article is From May 08, 2019

ஜம்மூ காஷ்மீரில் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட நிருபர்களுக்கு ‘லஞ்சம்’!?- பகீர் சிசிடிவி வீடியோ

இந்த விவகாரம் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமை லெஹ் பத்திரிகையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், உள்ளூர் தேர்தல் அதிகாரியிடம், ‘ரவீந்தர் ரய்னா தங்களுக்கு லஞ்சம் தர முயன்றுள்ளார்’ என புகார் அளித்துள்ளனர்

Srinagar:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் லேஹ் பகுதியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் சிலர், ‘தேர்தலில் சாதகமான செய்திகள் வெளியிட நிருபர்களுக்கு பாஜக லஞ்சம் கொடுத்துள்ளது' என்று பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் பாஜக ஒருங்கிணைத்த செய்தியாளர் சந்திப்பின் போது கடித உறைகள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 

சிசிடிவி வீடியோ க்ளிப்பில், பாஜக-வின் மாநிலத் தலைவர் ரவீந்தர் ரய்னா முன்னிலையில், பாஜக மக்கள் பிரதிநிதி விக்ரம் ரந்தாவா, கடித உறைகள் வழங்குவது தெரிகிறது. இந்த வீடியோவின் நம்பகத்தன்மை NDTV-யால் உறுதி செய்ய முடியவில்லை. 

கடந்த வெள்ளிக் கிழமை லெஹ் பத்திரிகையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், உள்ளூர் தேர்தல் அதிகாரியிடம், ‘ரவீந்தர் ரய்னா தங்களுக்கு லஞ்சம் தர முயன்றுள்ளார்' என புகார் அளித்துள்ளனர். 

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து பாஜக தரப்பு, ‘நிர்மலா சீதாராமனின் பிரசாரக் கூட்டம் தொடர்பான விவரங்களைத்தான் கடித உறையில் பத்திரிகையாளர்களிடம் கொடுத்தோம். எங்கள் மீது புகார் அளித்துள்ள பத்திரியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்' என்று விளக்கம் அளித்துள்ளது. 

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ரிஞ்சன் அங்மோ, ‘என்னையும் சேர்த்து 4 பத்திரிகையாளர்களிடம் பாஜக தரப்பு லஞ்சம் கொடுக்க முயன்றது. நாங்கள் உறையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது, அதை திறக்க வேண்டாம் என்றும் அன்பளிப்பு என்றும் கூறினர். நான் உறையைத் திறந்து பார்த்தால் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. நான் அதை அவர்களிடமே திரும்ப ஒப்படைத்தேன். ஆனால், அதை வாங்க அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே, அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டேன்' என்று கூறியுள்ளார். 
 

இந்த விவகாரம் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில தேர்தல் அதிகாரி அவ்னி லவாசா, ‘இந்த விவகாரம் குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளோம். உள்ளூரில் இருக்கும் நீதிமன்றத்திடம் விசாரணை குறித்த தகவல்களை அனுப்பி வைத்துள்ளோம். மாஜிஸ்ட்ரேட் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். 

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்டி ஆகியோர், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர். 


 

.