This Article is From Nov 22, 2018

மதிமாறன் போன்றோரிடம் திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: வன்னி அரசு காட்டம்!

திமுக தலைமை மதிமாறன் போன்றோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார்.

மதிமாறன் போன்றோரிடம் திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: வன்னி அரசு காட்டம்!

மதிமாறன் போன்றோரிடம் திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு காட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எழுத்தாளர் வே.மதிமாறன் தனது முகநூல் பதிவில், பா.ஜ.க-வைத் தவிர, திமுக-வுடன் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஆட்சியில் பங்கு கேட்பவர்களும், முதல்வராகும் ஆசை உள்ளவர்களும் கூட்டணியைத் தவிர்ப்பது நல்லது. முடிவு வந்த பிறகு குமாரசாமியைப்போல் நம்மளும் முதல்வராகி விடலாம் என்ற திட்டம் உள்ளவர்கள் கூட்டணிக்குள் இருப்பது திமுக விற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் நல்லதல்ல.

என்னுடைய தமிழக அரசியல் சுற்றுப்பயண அனுபத்தை வைத்துச் சொல்கிறேன், தனித்தே ஆட்சியமைக்கும் அளவிற்குத் திமுக விற்குச் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. ஆக, ‘திமுக அமைச்சரவை, ஸ்டாலின்தான் முதல்வர்' என்கிற முடிவோடு இருப்பவர்கள் மட்டும் கூட்டணிக்குள் வருவது சிறப்பு என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது முகநூல் பதிவில்,

மன நோயாளி ராமதாசு வழியில் மதிமாறன்? 'அணுகூல சத்ரு' என்று சொல்வார்கள். இதற்கு பொருத்தமான நபர் மதிமாறன் தான். இன்னும் சொல்வதென்றால் ‘மக்களே போல் கள்வர்' என்று வள்ளுவர் அடையாளம் காட்டியவரும் இதே மதிமாறன் தான்.

இப்போது திமுகவுக்கு ஆதரவானவர் போலவும், திராவிட கருத்தியலை பரப்புரை செய்பவர் போலவும் காட்டிக்கொள்ளும் இவர் திமுகவுக்கு எதிராக இறக்கி விடப்பட்டடுள்ள ‘அணுகூல சத்ரு'.

திமுக தனியாகவே வெற்றி பெறும் என்றும் ஸ்டாலினே முதல்வராவார் என்று கட்டி இறக்கி விடுவதற்கு காரணம், ஸ்டாலின் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதை தவிர எதுவும் இல்லை.

அது மட்டுமல்லாது, வலதுசாரி இந்துத்தவ அரசியல் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதை எதிர்கொள்ள மதசார்பற்ற கட்சிகள்
மற்றும் இயக்கங்கள் ஒருங்கிணைய வேண்டியது அவசியம் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்தியா முழுக்க பாஜக, இந்துத்துவக்கும்பலுக்கு எதிராக அணி சேர்ந்து வருகிறார்கள். இதை உணர்ந்து தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி அமைக்க உதவினார். இல்லையென்றால் பாஜக தான் ஆட்சி அமைத்திருக்கும். அந்த சமூக நீதிபார்வையோடு தான் திரு.ஸ்டாலின் அவர்கள் பாஜகவுக்கு எதிராக அணி சேர்த்து வருகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் 2016ஆம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடனேயே மதச்சார்பின்மை மாநாட்டை நடத்தி பாஜக போன்ற சனாதனிகளுக்கு எதிராக பற்ற வைத்தார். இந்த நெருப்பு இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களிலும் பற்ற ஆரம்பித்து விட்டது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு கூட இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான்.
நிலைமை இப்படி இருக்க தமிழ்நாட்டில் மட்டும் திமுக தனியாகவே நின்று வெற்றி பெறும் என்று பரப்புரை செய்வது, திமுகவின் மீதான வெறுப்பில் மட்டுமல்ல; திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்ற உள்நோக்கத்தை தவிர எதுவும் இல்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது கூட, திமுக தனித்தே வெற்றி பெறும் என்று திமுக தலைமைக்கு தவறான ஆலோசனை கூறியதால் தான் திமுக தோல்வியை சந்தித்தது. அதே தவறான ஆலோசனைய தான் இப்போது மதிமாறனும் கூறுகிறார். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்னும் முழக்கம் கோட்பாட்டு முழக்கமாகும். இதையே தான் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்று வள்ளுவர் முழங்கினார்.

பகுத்து உண்பது வெறும் உணவு மட்டுமல்ல; அதிகாரமும் தான். பல அதிகாரங்களை குறளில் படைத்த வள்ளுவன் உணவுக்காக மட்டுமா இதை எழுதியருப்பார். சமத்துவத்துக்கான முழக்கம் தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்னும் முழக்கம். ஆனால், இதை திமுகவுக்கு எதிரான முழக்கமாக மாற்றத்துடிக்கிறார் மதிமாறன்.

அடங்க மறு, அத்துமீறு என்னும் முழக்கம் கொள்கை முழக்கம் மட்டுமல்ல; விடுதலை முழக்கம் தான். ஆனால் இந்த முழக்கத்தை ஒரு வன்முறை முழக்கமாக, தலித் அல்லாதோருக்கு எதிரான முழக்கமாக மாற்ற சாதிய மனநோயாளி ராமதாசு எப்படி முயற்சி செய்தாரோ அதே முயற்சியைத்தான் அறிவுஜீவி மதிமாறனும் செய்கிறார். ராமதாசுக்கும் மதிமாறனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஆகவே, திமுக தலைமை மதிமாறன் போன்றோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார்.


 

.