This Article is From Mar 02, 2020

மாநிலங்களவை தேர்தலுக்கு மூன்று வேட்பாளர்களை அறிவிக்கிறது தி.மு.க

தேர்தல் ஆணையத்தின் மாநிலங்களவை தேர்தல்களுக்கான அட்டவணையின்படி, மார்ச் 26 அன்று வாக்கெடுப்பு நடைபெறும், அதே நாளில் வாக்குகளின் எண்ணிக்கையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

மாநிலங்களவை தேர்தலுக்கு மூன்று வேட்பாளர்களை அறிவிக்கிறது தி.மு.க

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலங்களவை தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களை அறிவித்தார்.

Chennai:

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலங்களவைத் தேர்தலுக்கான தனது மூன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

கட்சியின் அறிக்கையில்,  திருச்சி  சிவா, அந்தியூர்  செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் கட்சி வேட்பாளர்களாக இருப்பார்கள் என்று தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான சசிகலா புஷ்பா, விஜிலா சத்யநாத், எஸ்.முத்துக்கறுப்பன், ஏ.கே.செல்வராஜ் (அ.தி.மு.க), திமுகவின் திருச்சி சிவா மற்றும் சி.பி.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோர்களின் பொறுப்பு காலம் ஏப்ரல் 2-ம் தேதியும் முடிவடைகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மாநிலங்களவை தேர்தல்களுக்கான அட்டவணையின்படி, மார்ச் 26 அன்று வாக்கெடுப்பு நடைபெறும், அதே நாளில் வாக்குகளின் எண்ணிக்கையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது சட்டமன்றத்தில், ஆளும் அ.தி.மு.க 125 (சபாநாயகர் உட்பட) உறுப்பினர்களையும், தி.மு.க மற்றும் அதன் கூட்டாளிகள் 106 (தி.மு.க 98, காங்கிரஸ் 7 மற்றும் ஐ.யூ.எம்.எல் 1) உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. எனவே இரு கட்சிகளும் – அ.தி.மு.க மற்றும் தி.மு.க - தலா மூன்று இடங்களை வெல்ல முடியும்.

தற்போது, ​​அ.தி.மு.க-வில் மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களும், தி.மு.க-வுக்கு ஐந்து உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்குப் பிறகு, மாநிலங்களவையில் அ.தி.மு.க-வின் வலிமை ஒன்பது ஆகவும், தி.மு.க-வின் வலிமை ஏழு ஆகவும் மாறுபடும்.

ஓய்வு பெற இருக்கும் சி.பி.எம் மாநிலங்களவை உறுப்பினரான ரங்கராஜன் கடந்த முறை அ.தி.மு.க ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சி.பி.எம் கட்சியானது தி.மு.க கூட்டணியில் உள்ளது.

இதற்கிடையில், அ.தி.மு.க முன்னரே வாக்குறுதியளித்தபடி ஒரு மாநிலங்களவைக்கான உறுப்பினர் பதவியை தே.மு.தி.க எதிர்பார்க்கிறது என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தே.மு.தி.க-வின் எதிர்பார்ப்பு குறித்து விசாரித்த அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான கே பழனிசாமி இந்த விவகாரம் கட்சி உயர் மட்ட முடிவுகள் மூலம் இறுதி செய்யப்படும் என்று கூறியிருந்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.