This Article is From Jun 27, 2019

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: தொடங்கிய சில நிமிடங்களிலே காலியானது!

வெளியூர் செல்லும் மக்களுக்கான தீபாவளி ரயில் முன்பதிவு ரயில்வே கவுண்டர்கள் மற்றும் ஆன்லைனில் இன்று காலை தொடங்கிய சில நிமிடங்களிலே காலியானது.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: தொடங்கிய சில நிமிடங்களிலே காலியானது!

சொந்த ஊரிலிருந்து தொழில், படிப்பு, வேலை போன்ற காரணங்களுக்காக சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பண்டிகை உள்ளிட்ட முக்கிய விசேஷங்களுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்வதற்காக ரயில் டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்னரே பதிவு செய்துகொள்ள முடியும்.

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர்.27ஆம் தேதி வருகிறது. அது, ஞாயிற்றுக்கிழமையன்று வருவதால், அனைவரும் அக்.25ம் தேதியே (வெள்ளிக்கிழமை) சொந்த ஊர் செல்ல அன்றைய நாளில் முன்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அக்.25-ஆம் தேதிக்கான பயணத்துக்கு இன்னும் 120 நாட்கள் உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர்.

இதற்கான முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், தொடங்கிய சில மணி நேரங்களிலே பல முக்கிய ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் காலியானது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முடிந்தது.

இதேபோல், பல முக்கிய ரெயில்களில் காத்திருப்பு பட்டியலில் கூட முன் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதேபோல் அக்டோபர் 26ம் தேதி (சனிக்கிழமை) சொந்த ஊர் செல்ல விரும்புவோர் நாளை டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதே போன்று தீபாவளி அன்று (அக்டோபர் 27ம் தேதி) பயணம் செய்வதற்கு, ஜூன் 29ம் தேதி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.

.