This Article is From Jul 30, 2020

அண்ணா சிலை அவமதிப்புக்கு துணை முதல்வர் கண்டம்!

காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அண்ணா சிலை அவமதிப்புக்கு துணை முதல்வர் கண்டம்!

தமிழகத்தில் சமீப காலங்களில் பெருந்தலைவர்கள் சிலைகளை அவமதிக்கும் செயல் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றது. முன்னதாக எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததற்கு முதல்வர் பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயலுக்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில்,

“கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா திருவுருவச் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும்.” என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக இது போன்ற செயல்கள் அரங்கேறி வரும் நிலையில் காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

.