This Article is From Oct 22, 2018

டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: மத்திய அரசை சாடும் கெஜ்ரிவால்!

Petrol Pump Strike in Delhi: தலைநகர் டெல்லியில், 400 பெட்ரோல் பங்குகள் இன்று மூடப்பட்டுள்ளன

டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: மத்திய அரசை சாடும் கெஜ்ரிவால்!

டெல்லி பெட்ரோல் டீலர்ஸ் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • 23 மணி நேரத்துக்கு ஸ்டிரைக் நடக்க உள்ளது
  • ஸ்டிரைக்கிற்கு காரணம் மத்திய அரசு, கெஜ்ரிவால்
  • மத்திய அரசு சமீபத்தில், எரிபொருள் விலையை ரூ.2.50 குறைத்தது
New Delhi:

தலைநகர் டெல்லியில், 400 பெட்ரோல் பங்குகள் இன்று மூடப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரி விதிப்பைக் குறைக்காததைக் கண்டித்து இன்று காலை 6 மணி முதல் 23 மணி நேரத்துக்கு இந்த வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 13 மாநிலங்கள், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வாட் வரி விதிப்பைக் குறைத்தன. இதையடுத்து டெல்லியிலும் வாட் வரி குறைக்க வேண்டுமென்று குரலெழுந்தது. இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததை அடுத்து, டெல்லி பெட்ரோல் டீலர்ஸ் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் நிஷால் சிங்கானியா, ‘டெல்லி அரசுடன் வாட் வரி குறைப்பு குறித்து நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, எங்களுக்கு ஸ்டிரைக் அறிவிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘இந்த ஸ்டிரைக் பாஜக தூண்டுதலால் நடப்பதாக, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மக்களை அவதிக்கு உள்ளாக்கும் வகையிலான தரக்குறைவான அரசியலில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜக-விற்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்' என்று கொதித்துள்ளார்.

அக்டோபர் 4 ஆம் தேதி, மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 2.50 ரூபாய் குறைத்தது. இது குறித்து ட்விட்டரில் கெஜ்ரிவால், ‘கலால் வரியை 10 ரூபாய் அதிகரித்து, 2.50 ரூபாய் மட்டும் குறைத்துள்ளது மத்திய அரசு. இது போலியான நடவடிக்கை' என்று சாடினார்.

அதே நேரத்தில் கேரள அரசு, ‘பிரதமர் மோடி, 2014 ஆம் ஆண்டு பதவியேற்கும் போது என்ன நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இருந்ததோ அதற்கே மீண்டும் விலைகள் கொண்டுவரப்பட வேண்டும். அப்போது தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்' என்று கூறியுள்ளது.

.