This Article is From Jun 26, 2020

“எந்த விதிமுறை மீறலும் அல்ல…”- '7 நாளில் கொரோனா குணமடைய மருந்து’ விவகாரம் பற்றி பதஞ்சலி விளக்கம்!

தங்கள் மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கொரோனா தொற்றிலிருந்து பரிபூரணமாக குணமடைந்து விடலாம் என்று பதஞ்சலி உறுதியளித்தது.

“எந்த விதிமுறை மீறலும் அல்ல…”- '7 நாளில் கொரோனா குணமடைய மருந்து’ விவகாரம் பற்றி பதஞ்சலி விளக்கம்!

‘நோயாளிகள் மீது மருத்துவ ரீதியில் சோதித்ததில் 100 சதவீத சாதகமான முடிவுகள் வந்துள்ளன’ என்று தெரிவித்தது பதஞ்சலி

ஹைலைட்ஸ்

  • இரு நாட்களுக்கு முன்னர் பதஞ்சலி நிறுவனம் 'கொரோனா மருந்து' பற்றி கூறியது
  • மத்திய அரசு, பதஞ்சலியின் மருந்தை விற்கத் தடை விதித்துள்ளது
  • இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை: WHO
Dehradun:

உலகையை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று குணமடைய தாங்கள் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது யோகா குரு ராம்தேவின் ‘பதஞ்சலி' நிறுவனம். தங்கள் மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கொரோனா தொற்றிலிருந்து பரிபூரணமாக குணமடைந்து விடலாம் என்றும் பதஞ்சலி உறுதியளித்தது. ஆனால் மத்திய அரசு தரப்போ, ‘பதஞ்சலி நிறுவனம் எங்களிடம் இது குறித்து சரியான ஆவணங்களை சமர்பிக்கவில்லை. எனவே அந்த மருந்து குறித்து விளம்பரப்படுத்தக் கூடாது. விற்கவும் கூடாது,' என்று உத்தரவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் பதஞ்சலி நிறுவனம், ‘தாங்கள் அனைத்தையும் விதிமுறைகளுக்கு உட்பட்டே செய்தோம்' என உறுதிபட தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரம் பற்றி பதஞ்சலியின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.திஜாராவாலா, “பாரம்பரிய அறிவை முதன்மையாகக் கொண்டுதான் நாங்கள் கண்டுபிடித்த மருந்துக்கு உரிமம் வாங்கினோம். கொரோனா தொற்று இருந்தவர்களிடம் நாங்கள் செய்த மருத்துவ ரீதியான சோதனைகளில் வந்த நேர்மறை முடிவுகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட தரப்புகளோடு பகிர்ந்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார். 

பதஞ்சலி தரப்பு, தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா மருந்து குறித்து எந்தவொரு குழப்பமும் வேண்டாம். இந்த மருந்தானது அரசு விதித்த விதிமுறைகளின்படியே தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றுள்ளது. 

பதஞ்சலி நிறுவனம் முன்னதாக, ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்' ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமடையும் என்று அறிவித்தது. இந்த கிட் மூலம், ‘நோயாளிகள் மீது மருத்துவ ரீதியில் சோதித்ததில் 100 சதவீத சாதகமான முடிவுகள் வந்துள்ளன' என்று தெரிவித்தது. உலகின் பல மூளைகளிலும் விஞ்ஞானிகள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க பாடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்து கிட்டுக்கு 545 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் இந்த மருந்து விற்பனைக்கு வரும் என்று பதஞ்சலி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆயுஷ் அமைச்சகம், “பதஞ்சலியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்தில் என்ன இருக்கிறது என்பது குறித்தான விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். மருந்து வைத்து செய்த ஆய்வு முடிவுகள், எந்தெந்த மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறித்த விவரம், கிளினிக்கல் டிரெயலுக்கு முறையாக பதிவு செய்யப்பட்டதா என்கிற விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும். இதுவரை இந்த விவரங்கள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தப்படவில்லை. ஆயுர்வேத மருந்து தயாரிக்கப்பட்டது குறித்தான முறையான ஆவணங்களும் கொடுக்கப்பட வேண்டும்,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

அதேபோல உத்தரகாண்டில்தான், பதஞ்சலி ‘கொரோனா மருந்து' உற்பத்தி செய்தது. அங்கு அதற்கு தயாரிக்கும் உரிமம் கொடுத்த அதிகாரி ராவத், “இருமல் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாக ஒரு மருந்தை தயாரிக்கத்தான் பதஞ்சலி நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. அவர்களின் விண்ணப்பத்தில் கொரோனா வைரஸ் குறித்து எந்தத் தகவலும் இடம் பெறவில்லை,” என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தும் பதஞ்சலி விளக்கம் கொடுக்க நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், “இதைப் போன்ற போலியான மருந்துகளை எங்கள் மாநிலத்தில் விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம்,” என்று எச்சரித்துள்ளார். 
 

.