தற்கொலை செய்து கொண்ட ஜெர்மன் மாநில நிதியமைச்சர்..! - காரணம் பொருளாதாரத்தை சீர்குலைத்த 'கொரோனா'

Coronavirus Outbreak: "இதைப் போன்ற இக்கட்டான சூழலில்தான் அவரைப் போன்ற ஒருவர் எங்களுக்கு அதிகம் தேவைப்பட்டிருப்பார்"

தற்கொலை செய்து கொண்ட ஜெர்மன் மாநில நிதியமைச்சர்..! - காரணம் பொருளாதாரத்தை சீர்குலைத்த 'கொரோனா'

கடந்த 10 ஆண்டுகளாக ஹீஸ் மாநிலத்தின் நிதியமைச்சராக பணியாற்றி வந்த தாமஸுக்குப் பொதுத் தளத்தில் அதிக மரியாதை இருந்தது.

Frankfurt am Main:

ஜெர்மன் நாட்டின் ஹீஸ் மாநில நிதியமைச்சர் தாமஸ் ஷாஃபர், கொரோனா வைரஸால் நிலைகுலைந்த பொருளாதாரத்தால் கவலை கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த தகவலை அந்த மாநில பிரீமியர் (முதல்வர் பொறுப்பு), வோல்கர் போஃபீர் தெரிவித்துள்ளார். 

கடந்த சனிக்கிழமை 54 வயதாகும் தாமஸ், ஹீஸ் மாநிலத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கவே வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

“எங்களுக்கு இது பேரதிர்ச்சி. இதை நம்பவே முடியவில்லை. நாங்கள் அனைவரும் கடும் மன வருத்தத்தில் உள்ளோம்,” என்று பொங்குகிறார் பிரீமியர் வோல்கர். 

ஜெர்மனியின் பொருளாதாரத் தலைநகரமான ஃபிராக்ஃபர்டுக்கு தலைமையிடம் ஹீஸ் மாநிலம்தான். அங்குதான் நாட்டின் முக்கிய வங்கிகளான டாயிட்ஷ் வங்கி, காமர்ஸ் வங்கியின் தலைமை அலுவலகங்கள் உள்ளன. ஐரோப்பிய மத்திய வங்கியும் ஃபிராங்ஃபர்டில்தான் அமைந்துள்ளது. 

தாமஸின் மறைவால் ஆடிப்போயுள்ள பிரீமியர் வோல்கர், “மாநிலத்தின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த இரவும் பகலும் நிறுவனங்களுடன் பணி செய்து வந்தார் தாமஸ். அவர் பொருளாதாரம் குறித்து மிகுந்த கவலையுடன் இருந்துள்ளார் என்பதைத்தான் இந்த சம்பவம் உணர்த்துகிறது.

இதைப் போன்ற இக்கட்டான சூழலில்தான் அவரைப் போன்ற ஒருவர் எங்களுக்கு அதிகம் தேவைப்பட்டிருப்பார்,” என்கிறார். 

கடந்த 10 ஆண்டுகளாக ஹீஸ் மாநிலத்தின் நிதியமைச்சராக பணியாற்றி வந்த தாமஸுக்குப் பொதுத் தளத்தில் அதிக மரியாதை இருந்தது. பிரீமியர் வோல்கரைப் போலவே, தாமஸும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் சிடியூ கட்சியைச் சேர்ந்தவர்தான்.