This Article is From Apr 04, 2020

கொரோனா வைரஸ் இப்படிகூட பரவலாம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள்!

Coronavirus: இந்த புதிய ஆய்வு குறித்த அறிக்கையை, அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி, அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் இப்படிகூட பரவலாம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள்!

இன்னும் ஆய்வு முடிவுகள் குறித்து ஸ்திரமான ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும், போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. 

Washington:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, பாதிக்கப்பட்ட நபர் பேசினாலோ அல்லது சுவாசித்தாலோ கூட காற்று மூலமாக பரவக்கூடும் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள். 

அமெரிக்காவின் தேசிய சுகாதார இன்ஸ்டிட்டியூட்டின் தலைவர் அந்தோனி ஃபவுசி, “பாதிக்கப்பட்ட நபர் இருமினாலோ, தும்மினாலோ மட்டும்தான் கொரோனா பரவும் என்பதற்கு பதிலாக, அவர் பேசினால் கூட பரவும் என்கிற தகவல் தற்போது வந்துள்ளது,” என இவ்விவகாரம் பற்றி பேசியுள்ளார். 

இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் முகத்திற்கு மாஸ்க் போடுவது போதாது என்றும், அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நபரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த புதிய ஆய்வு குறித்த அறிக்கையை, அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி, அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இன்னும் ஆய்வு முடிவுகள் குறித்து ஸ்திரமான ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும், போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த ஆய்வு முடிவுகள் குறித்து ஒரு தரப்பு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன. காரணம், இந்த ஆய்வுகள் நெபுலைசர் எனப்படும் கருவியை வைத்து செய்யப்பட்டது. இந்தக் கருவி, மனிதர்களைப் போல் அல்லாமல், கொஞ்சம் மிகைப்படுத்தியே காற்றை வெளியேவிடும். இதனால், இந்த ஆய்வு முடிவுகள் சரியானவைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இப்படி ஒரு புது ஆய்வு, அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தெரிவித்திருந்தாலும், உலக சுகாதார நிறுவனமான WHO, இதுவரை இந்த விஷயத்தை அங்கீகரிக்கவில்லை.

உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்ட நபர் பேசினாலே காற்று மூலமாக பரவலாம் என்கின்ற கூற்றை மிகவும் கவனமாக ஆராய்ந்து வருகிறது. இது குறித்து மார்ச் 29 ஆம் தேதி, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ‘இந்தக் காற்றுத் தொற்றானது மிகச் சில நேரங்களில் மட்டுமே இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்க, மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும்போது இப்படியொரு தொற்று இருந்துள்ளது,' என்று மட்டும் கூறியுள்ளது. 
 

.