This Article is From May 20, 2020

இந்தியாவில் கொரோனா தொற்றால் 3,303 பேர் உயிரிழப்பு! முக்கியத் தகவல்கள்!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,611 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் 3,303 பேர் உயிரிழப்பு! முக்கியத் தகவல்கள்!!

இந்தியாவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,06,750 ஆக அதிகரித்துள்ளது. 61,149 பேர் நாடு முழுவதும் சிகிச்சைபெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 42,297 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,303 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,611 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 140 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

  • தேசிய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் 688 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர். தற்போது தமிழகம் முழுவதும் 12,448 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்திற்கு அடுத்தபடியாக குஜராத் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியில் மூன்றாவதாக உள்ளது. இம்மாநிலத்தில் 12,140 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவப்பு மண்டலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளான மும்பை, புனே போன்ற நகரங்களிலிருந்து வெளியே வருதை மக்கள் தவிர்க்குமாறு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே கேட்டுக்கொண்டுள்ளார்.தற்போது மாநிலம் முழுக்க 37,136 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் மட்டும் 21,335 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மத்திய அரசு அறிவித்த எந்த தளர்வுகளும் மும்பையில் அமல்படுத்தப்படவில்லை. மும்பையில் தற்போது தொற்று பரவலை குறைப்பது மட்டுமே எங்களது முழு நோக்கம் என அம்மாநில அமைச்சர் அஸ்லம் ஷேக் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொணட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதற்கு புலம் பெயர் தொழிலாளர்களும் காரணமாவார்கள். சமீபத்தில் உத்தரப் பிரதேசம் பஸ்டி மாவட்டத்திற்கு திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்களில் 50 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 4,926 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
  • தெலுங்கானா மாநிலத்தினை பொறுத்த அளவில், தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசத்திலிருந்து மாநிலத்திற்கு வர விரும்புவர்களுக்கான அனுமதி வழங்குதலை தற்போது தெலுங்கானா நிறுத்தியுள்ளது. இவ்வாறாக புலம் பெயர்பவர்கள் மூலமாக புதியதாக தொற்று பரவலாம் என மாநில அரசு கருதுகிறது. தற்போது மாநிலத்தில் இதுவரை 1,634 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • வடகிழக்கு மாநிலமான அசாமை பொறுத்த அளவில், மாநிலத்திற்கு திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள் மூலம் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது வரை 142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது மூன்றாவது முறையாக பல தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளுக்கான ரயில் போக்குவரத்தினை அடுத்த மாதம் 1-ம் தேதியிலிருந்து துவங்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 200 ரயில்கள் குளிர் சாதன வசதியில்லாதவையாக இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக  போராடிக்கொண்டிருக்கையில் இந்தியாவின் இரு மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகியவை ஆம்பன் புயலை எதிர்கொண்டு இருக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை தலைவர் “மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் இரு வேறு தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது. ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக மூன்று லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கும் முகாம்களில் தனிமனித இடைவெளியும் கடைப்பிடிக்கப்படுகின்றன” என என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாகக் குழுவின் தலைவராக மே 22 அன்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • கடந்த மூன்றாண்டுகளில் மக்கள் சேமித்த பொருளாதார வளங்கள் இந்த நெருக்கடிக் காலக்கட்டங்களில் தீர்ந்து, சுமார் 60 மில்லியன் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
  • சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. சுமார் 48,97,842 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,23,287 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றால் 91,845 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத் தரவுகள் தெரிவித்துள்ளன.

.