This Article is From Feb 08, 2019

''திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டும்'' - அழைப்பு விடுக்கிறது காங்கிரஸ்

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்ற தொனியில் நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார்.

''திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டும்'' - அழைப்பு விடுக்கிறது காங்கிரஸ்

கமல்ஹாசன் தனித்துப் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • திமுக, அதிமுகவை விமர்சித்து வருகிறார் கமல்ஹாசன்
  • பினராயி விஜயனை கமல் பின்பற்ற வேண்டும் என்கிறது காங்கிரஸ்
  • அதிமுக - பாஜக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுகளை தமிழக அரசியல் கட்சிகள் பேச ஆரம்பித்து விட்டன. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 2 கட்சிகளை தவிர்த்து மற்ற எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க தயார் என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்று காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது. காங்கிரசின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தியாகராய நகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது- 

எங்களது கரத்தை கமல்ஹாசன் வலுப்படுத்த வேண்டும். மதசார்பற்ற, நேர்மையான, மக்களை ஒன்றுபடுத்துகிற அரசாங்கத்தை எற்படுத்தும் முயற்சிக்கு கமல்ஹாசன் துணை நிற்க வேண்டும். 

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தபோது கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த பினராயி விஜயன் எங்களது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரைப் பின்பற்றி நடிகர் கமல்ஹாசனும் எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

.