This Article is From Jan 24, 2019

போராட்டத்தில் குதித்த ஆப்பரேட்டர்கள் : நாடு முழுவதும் கேபிள்டிவி சேவை பாதிப்பு

மத்திய அரசின் ட்ராய் நிறுவனத்தின் கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் குதித்த ஆப்பரேட்டர்கள் : நாடு முழுவதும் கேபிள்டிவி சேவை பாதிப்பு

கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாடு முழுவதும் கேபிள் டிவி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கேபிள் டிவி ஒளிபரப்பு தொடர்பாக மத்திய அரசின் ட்ராய் நிறுவனம் புதிய கொள்கையை அறிவித்தது. இதன்படி, கேபிள் டிவி வழங்கும் அனைத்து சேனல்களை பார்ப்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட சேனலை மட்டும் பணம் கொடுத்து பொதுமக்கள் பார்த்தால் போதும் என கூறப்பட்டிருந்தது. 

இந்த கொள்கை தங்களை பாதிப்பதாகவும், இதனால் மிகப்பெரும் நிறுவனங்கள் மட்டுமே பலனடைய முடியும் என்றும் கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் அமைப்பு கூறியிருந்தது. இந்த நிலையில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் நாடு தழுவிய போராட்டத்தை இன்று அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டை பொறுத்தளவில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் கேபிள் டிவி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 

தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அடுத்த கட்டமாக ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்துவோம் என்றும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அறிவித்துள்ளனர். 

.