ஆந்திர தலைநகர் அமைப்பதற்கான கடனுதவியை நிறுத்தியது உலக வங்கி!!

கடனுதவி பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் இதனால் ரூ. 2 ஆயிரம் கோடி கடனுதவி நிறுத்திக் கொள்ளப்பட்டதாகவும் உலக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா அமராவதி என்ற பெயரில் தலைநகரை அமைத்து வருகிறது.

Hyderabad:

ஆந்திர தலைநகர் அமராவதியை அமைப்பதற்கான கடனுதவியை உலக வங்கி நிறுத்திக் கொண்டுள்ளது. இதற்கு கடனுதவி பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதே காரணமாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகராக ஐதராபாத் இருந்து வந்த நிலையில் கடந்த 2014-ன்போது ஆந்திரா, தெலங்கானா என 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு 2 மாநிலங்களின் பொது தலைநகராக ஐதராபாத் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்குள்ளாக ஆந்திரா தனது புதிய தலைநகரை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது விதி.இந்த நிலையில் ஆந்திராவின் தலைநகர் அமராவதி என்ற பெயரில் அமையும் என்று 2014-ல் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

அமராவதியை கட்டமைப்பதற்கு மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு செலவாகும் என கணிக்கப்பட்டது. இதுதொடர்பாக உலக நிறுவனங்களிடம் கடன் கேட்கும் முயற்சியில் ஆந்திர அரசு இறங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசு மூலமாக 300 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரம் கோடியை உலக வங்கியிடம் இருந்து பெறும் முயற்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில் கடனுதவி வழங்குவதை நிறுத்திக் கொள்வதாக உலக வங்கியின் செய்தி தொடர்பாளர் சுதிப் மசூம்தார் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதற்கு கடனுதவி பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது.  

More News