This Article is From Nov 12, 2018

பாஜக-வுக்கு எதிராக மெகா கூட்டணியா!? - நவ., 22-ல் டெல்லியில் சந்திக்கும் எதிர்கட்சிகள்!

சந்திர பாபு நாயுடு, பாஜக-வுடன் கூட்டணி வைத்திருந்தவர் தான். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் கூட்டணி முறிவு ஏற்பட்டது

கடந்த சில வாரங்களாக சந்திரபாபு நாயுடு எதிர்கட்சித் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

ஹைலைட்ஸ்

  • கடந்த வெள்ளிக் கிழமை நாயுடு, ஸ்டாலினை சந்தித்தார்
  • நவம்பர் 22-ல் டெல்லியில் எதிர்கட்சிகள் சந்திக்க உள்ளன
  • பாஜக கூட்டணியிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் விலகினார் சந்திரபாபு நாயு
Hyderabad:

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு பாஜக-வுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் வரும் 22 ஆம் தேதி, டெல்லியில் அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.

சந்திர பாபு நாயுடு, பாஜக-வுடன் கூட்டணி வைத்திருந்தவர் தான். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் கூட்டணி முறிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ‘ஆட்சியிலிருந்து பாஜக அகற்றப்பட வேண்டும். அதற்கு எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்' என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

வெறுமனே பேச்சோடு நிறுத்தாமல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜம்மூ – காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை தொடர்ந்து நேரில் சந்தித்து வருகிறார்.

கடந்த வெள்ளிக் கிழமை சென்னைக்கு வருகைத் தந்த சந்திரபாபு, ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் உரையாடினார். சந்திப்பு நிறைவு பெற்றதையடுத்து சந்திரபாபு, ‘அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதில் நாங்கள் அனைவரும் உறுதியோடு இருக்கின்றோம். கட்சிகளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனக்குக் கூட காங்கிரஸுடன் கடந்த 40 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனால், ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதனால், அனைவரும் ஒன்றாக வர சம்மதம் தெரிவிக்கின்றனர்' என்று கூறினார்.

.