This Article is From Apr 08, 2019

அதிருப்தியில் உள்ள அத்வானி, மனோகர் ஜோஷியை சந்திக்க அமித்ஷா திட்டம்!

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கட்சியின் மூத்த தலைவர்களை ஒதுக்கி வைத்து விட்டதாக குற்றம்சாட்டி வந்தநிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களை மீண்டும் பொதுக்கூட்டத்தில் முன்நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிருப்தியில் உள்ள அத்வானி, மனோகர் ஜோஷியை சந்திக்க அமித்ஷா திட்டம்!

அத்வானி, மனோகர் ஜோஷியை அமித்ஷா சந்திக்கிறார்.

New Delhi:

மக்களவைத் தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு அதிருப்தியில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்கட்சிகள் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கட்சியின் மூத்த தலைவர்களை ஒதுக்கி வைத்து விட்டதாக குற்றம்சாட்டி வந்தநிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களை மீண்டும் பொதுக்கூட்டத்தில் முன்நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் முடிவுகளில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏனெனில், எல்.கே.அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், அண்மையில் பாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 40 பேர் கொண்ட இந்த பட்டியலில், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உமாபாரதி ஆகியோர் இடம் பெற்றனர். ஆனால், எல்.கே.அத்வானியும், முரளி மனோகர் ஜோஷி பெயரும் இந்த பட்டியலிலும் இடம்பெறவில்லை.

கடந்த 2014 தேர்தலின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்காக, ஜோஷி தனது சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியை விட்டுக்கொடுத்து கான்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்படி இருக்க பாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியிலில் கூட ஜோஷி பெயர் இடம்பெறவில்லை என்பது அவரை வேதனைக்கு தள்ளியது.

இந்நிலையில், அண்மையில் எல்.கே.அத்வானி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 1991-ம் ஆண்டு முதல் மக்களவைக்கு தன்னை 6 முறை தேர்ந்தெடுத்த காந்திநகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பாஜக தொடங்கப்பட்டது முதலே, அரசியல் ரீதியாக வேறுபட்டு இருப்பவர்களை எதிரிகளாகவோ, தேசவிரோதிகளாகவோ பார்த்ததில்லை என்று அவர் கூறியிருந்தார்.

அத்வானி 6 முறை போட்டியிட்டு வென்ற காந்திநகர் தொகுதியில் தற்போது அமித்ஷா களம் இறக்கப்பட்டுள்ளார். இதேபோல், முரளிமனோகர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலும் தான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

.