This Article is From Apr 10, 2019

“தேர்தலுக்குப் பின்னர் தினகரன் கிங்-மேக்கரா..?”- NDTV-க்கு ஓ.பி.எஸ் பிரத்யேகப் பேட்டி

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி, 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும் நடக்கிறது.

ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு- ஓ.பி.எஸ்

New Delhi:

எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக - அதிமுக இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தோம். 

அப்போது அவரிடம், “சமீபத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், சாதி அமைப்பில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டோம். அவர் அதற்கு ஆம் என்று பதிலளித்தார். இதில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?”

ஓ.பி.எஸ் இது குறித்து கூறுகையில், “எங்கள் இயக்குத்துக்கென்று தனி கொள்கை உள்ளது. ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. அதன்படிதான் அம்மா வாழ்ந்தார். அதைத்தான் நாங்களும் பின்பற்றுவோம்.

இந்தியா என்பது பல்வேறு கலாசாரங்களையும் சமூகங்களையும் கொண்ட நாடு. இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர வேண்டும். எங்கள் அரசு எப்போதும் அதற்குத் துணை நிற்கும்” என்றார். 

தொடர்ந்து அவரிடம், “அப்படிப் பார்த்தால் பாஜக-வுக்கும் உங்களுக்கும் கொள்கை முரண் உள்ளது அல்லவா. எனவே, இது தேர்தலுக்காக மட்டும் வைக்கப்பட்ட கூட்டணியா?” என்று கேட்கப்பட்டது. 

“எங்கள் கட்சியின் கொள்கையைப் பின்பற்றித்தான் நாங்கள் ஆட்சி நடத்துவோம். எங்களுக்கு மனிதாபிமானத்தின் மீதும் மனித மாண்பின் மீதும்தான் நம்பிக்கையுள்ளது” என்றார். 

“ஜெயலலிதா இறந்த பின்னர் நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எப்படிப்பட்ட பின்னடைவை நீங்கள் உணர்கிறீர்கள்” என்றதற்கு, 

“அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. வாழ்நாள் முழுவதும் அந்த இழப்பு எங்களுக்கு இருக்கும். அதே நேரத்தில் அம்மா கொண்டு வந்த திட்டங்களை முன் வைத்து நாங்கள் மக்களிடத்தில் ஓட்டு கேட்டு வருகிறோம். எங்களுக்கு மக்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள்” என்று விளக்கினார். 

“ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை வென்ற பிறகு, அதிமுக-விலிருந்து பிரிந்து சென்ற தினகரன், அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து, தற்போது தமிழக அளவில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். இந்த முறை நடக்கும் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது அமமுக. தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர் கிங்-மேக்கர் ஆக வருவாரா?” எனக் கேட்டபோது, மிக கவனமாக,

“அதிமுக-வை தன் வசமாக்கிக் கொள்வதுதான் தினகரனின் ஒரே நோக்கம். ஒரு குடும்பத்தின் பிடியில் மொத்த கட்சியையும் கொண்டு வர அவர் விரும்புகிறார். தான் ஒரு பெரும் சக்தி என்று அவர் நினைத்துக் கொள்கிறார். மக்கள் அவரை நிராகரித்து விட்டனர்” என்றார் தீர்க்கமாக. 

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி, 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும் நடக்கிறது. மே 19 ஆம் தேதி, 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடக்கும். 


 

.