This Article is From Nov 17, 2018

3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கஜா புயல் காரணமாக காரைக்கால், தேனி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்ட கஜா புயல் நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது. கஜா புயல் கரையைக் கடக்கும் போது ஏற்பட்ட கடுமையான காற்றினால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

110 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் பல பகுதிகளில் மின் கம்பங்களும், மரங்களும் சாய்ந்துள்ளன. கஜா புயல் காரணமாக 3 மாவட்டங்களில் சுமார் 12,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

இதைத்தொடர்ந்து, திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், நீலகிரி, கோவை, திருச்சி, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பேரிடர் மேலாண்மை குழுவினர் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கஜா புயல் தற்போது கொடைக்கானலுக்கு வடகிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது கேரளாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில் விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். எனவே, தென்தமிழகம் மற்றும் வடதமிழக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கஜா புயல் காரணமாக காரைக்கால், தேனி மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.

.