This Article is From Mar 30, 2019

துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை! - மம்தா கடும் கண்டனம்!

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனைக்கு திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை! - மம்தா கடும் கண்டனம்!

காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் இன்று அதிகாலையில் சோதனை நடத்தினர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.

இதற்காக, வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் உள்ளிட்ட பரிசுபொருட்கள் துரைமுருகன் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்த எந்த ஒரு ஆவணங்களோ, பணமோ எதுவும் கைப்பற்றபடவில்லை என கூறப்படுகிறது.

இதேபோல், வாணியம்பாடியில் உள்ள திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜின் வீட்டிலும் 2 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திமுகவினர் வீட்டில் நடந்த இந்த வருமான வரித்துறை சோதனைக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என்றும் பாசிஸ்ட் பாய்ச்சல், சேடிஸ்ட் சேட்டையை பார்த்து திமுக ஒருக்காலும் ஓய்ந்துவிடாது என்றும் கூறினார்.

இந்நிலையில், திமுகவினர் வீட்டில் நடந்த இந்த சோதனைக்கு மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மற்றும் கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வருமான வரித்துறை சோதனை மூலம் எதிர்கட்சிகளை பாஜக மிரட்டுவதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

.