ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார் ஹர்திக் படேல்

குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை முன்னின்று வழிநடத்தியவர் ஹர்திக் படேல். அவர் காங்கிரசில் சேர்ந்திருப்பது குஜராத் அரசியலில் காங்கிரசுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார் ஹர்திக் படேல்

ஜாம் நகர் தொகுதியில் ஹர்திக் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ahmedabad:

குஜராத்தில் படேல் சமூகத்தின் சக்திமிக்க தலைவராக இருக்கும் ஹர்திக் படேல் ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரசில் சேர்ந்தார். அவர் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கட்சியில் சேர்ந்தது குறித்து ஹர்திக் படேல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
வெள்ளையர்களுக்கு எதிராக  மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை இந்த நாளில்தான் தொடங்கினார். இதே நாளில் நான் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறேன். இந்தக் கட்சியை முன்பு சுபாஷ் சந்திரபோஸ், நேரு, சர்தார் படேல், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி உள்ளிட்டேர் வழி நடத்திச் சென்றனர். அவர்கள் மக்கள் நலனுக்காக உழைத்த தலைவர்கள். 

இவ்வாறு ஹர்திக் கூறினார். ஜாம் நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஹர்திக் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த தொகுதி எம்.பி.யாக பாஜகவை சேர்ந்த பூனம்பெண் மாடம் இருந்து வருகிறார். 

மக்களவை தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 6 கோடி குஜராத் மக்களுக்காக குரல் கொடுக்க முடியும் என்று ஹர்திக் படேல் கூறியுள்ளார். எதற்காக காங்கிரஸ கட்சியை தேர்வு செய்தீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ''ராகுல்  காந்தி நேர்மையானவர். அவர் சர்வாதிகாரி போன்று செயல்பட விரும்பவில்லை'' என்று ஹர்திக் பதில் அளித்திருக்கிறார். 

குஜராத்தில் இட ஒதுக்கீடு கேட்டு கடந்த 2015-ல் பட்டேல் சமூகத்தினர் நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு போராட்டங்களை நடத்தினர். இதனை முன்னின்று வழிநடத்திச் சென்றவர் ஹர்திக் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.